தட்டி தூக்கிய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்! 11 மாதங்களாக கிடப்பில் இருந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
சென்னை: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையிலான காவல்துறை நடவடிக்கைகளின் பின்னணியில், ஏற்கெனவே முடித்து வைக்க முயற்சிக்கப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
2025 அக்டோபர் 6-ஆம் தேதி, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ அடங்கிய பென்-டிரைவ் ஒன்று குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர் வீரமணி என போலீசார் பின்னர் அடையாளம் கண்டதாகவும், தேனாம்பேட்டையில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் சிறுமிகள் அழைத்து வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த வீட்டை வீரமணியின் தொழில் தொடர்புடைய மகேந்திர சிம்ஹன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் நிர்வகித்து வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ஆனால், ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை.
இதை கொண்டு, போலீசார் வழக்கை முடிக்க முயன்றனர்.
இதற்காக சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ‘Further Action Dropped’ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முடிப்பு அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஏற்க மறுத்ததுடன், வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
நான்கு வாரங்களுக்குள் விசாரணையின் முன்னேற்றத்தைத் தெரிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. போலீசார் நடத்திய சோதனைகளில், பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அசல் காட்சிகள் அடங்கிய சாதனம் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
டிஜிட்டல் ஆதாரங்கள் தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடைய சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் மத்திய குற்றப்பிரிவின் விபச்சாரத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணை ஏன் இவ்வளவு காலம் முன்னேறாமல் இருந்தது என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை எவ்வாறு கையாளப்பட்டது, ஏன் முடிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் அவர்கள்சிறுமிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தல் நடந்ததா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, கடந்த 17-ஆம் தேதி வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை போலீசார் அடையாளம் கண்டு, அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர். இதனால் வழக்கின் விசாரணை மேலும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
1971-ல் கிரானைட் தொழிலில் கால் பதித்தவர்
வீரமணி, 1971-ஆம் ஆண்டு தனது சகோதரர்களுடன் இணைந்து கிரானைட் தொழிலை தொடங்கியதாகவும், பின்னர் அது ஜெம் கிரானைட்ஸ் நிறுவனமாக வளர்ந்ததாகவும் பழைய தொழில் பின்னணி குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரானைட் ஏற்றுமதி துறையில் அவரது நிறுவனம் முக்கிய இடத்தைப் பெற்றதாகவும், பல்வேறு தொழில் அமைப்புகளில் அவர் பதவிகளை வகித்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
பல ஆண்டுகளாக தொழில் மற்றும் சமூக வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றிருந்ததாகக் கூறப்படும் ஒருவரைச் சுற்றி எழுந்துள்ள இந்த வழக்கில், தற்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுவிசாரணைமீண்டும்தீவிரமடைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

admin
