ஜாமினில் வெளியே வந்தவருக்கு பீர் பாட்டில் அடி! ‘ஏற்கனவே புகார் கொடுத்தோம்… நடவடிக்கை இல்லை’ – மனைவி கதறல்!

ஜாமினில் வெளியே வந்தவருக்கு பீர் பாட்டில் அடி! ‘ஏற்கனவே புகார் கொடுத்தோம்… நடவடிக்கை இல்லை’ – மனைவி கதறல்!

ஜி குலசேகரன், 

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே முன்விரோதம் காரணமாக ஜாமினில் வெளியே வந்த நபரை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு ஏற்கெனவே மிரட்டல் இருந்ததாகவும், போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைமைக்கு காரணம் என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மாமுடிமாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர் அதே பகுதியில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த மாதம் பச்சூர் டோல்கேட் பகுதியில் மருதமுத்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில், மருதமுத்து பீர் பாட்டிலால் தனுஷின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தனுஷ் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து மருதமுத்து மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

இதற்கிடையே, ஜாமினில் வெளியே வந்த மருதமுத்துவை சில இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருதமுத்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பச்சூர் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மருதமுத்துவை, தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ் உள்ளிட்ட சிலர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

அப்போது பீர் பாட்டிலால் மருதமுத்துவின் தலையில் சரமாரியாக தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே மருத்துவமனை முன்பு மருதமுத்துவின் மனைவி கதறி அழுதபடி, “என் கணவனுக்கு ஏற்கெனவே மிரட்டல் இருந்தது. போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைமைக்கு காரணம்” என குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதமுத்துவை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் தனுஷ், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜாமினில் வெளியே வந்த நபர் மீது மீண்டும் பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.