க்யூ ஆர் கோடு வேஸ்ட்... மனம் நொந்த மது பிரியர்கள்!

க்யூ ஆர் கோடு வேஸ்ட்... மனம் நொந்த மது பிரியர்கள்!

கு.அசோக்,

  அரக்கோணம் அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மது வகைகள் வாங்கிக் கொள்ளும் வசதி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் மகிழ்ச்சி அடைந்த மது பிரியர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று காண்பித்து ஏமாந்தனர்.

   மேலும் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதும் தொடர்கதை ஆகியுள்ளது.

   தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அரசு டாஸ்மாக் மதுக் கடைகளிலும் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.  இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து அந்த க்யூ ஆர் கோடு சம்பந்தப்பட்ட மதுக்கடையில் காண்பித்தால் தாங்கள் முன்பதிவு செய்த மது வகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

  இதனால் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 தரவேண்டிய நிலை ஏற்படாது என்று அரசு தெரிவித்தது.

 இதுகுறித்து கள ஆய்வு செய்ய விரும்பிய மது பிரியர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கும்பினிபேட்டையில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையின் 1114 7 என்ற கடைக்கு ஆன்லைனில்  பணம் செலுத்தி மது வகைகள்முன்பதிவு செய்தனர்.

   அந்த க்யூஆர் கோடு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைக்கு சென்று காண்பித்தபோது எங்களுக்கு இன்னும் அந்த வசதி தரவில்லை . அதனால் மது பாட்டில்கள் தர முடியாது என்று மறுத்தனர்.

   இதனால் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . மேலும் அந்தப் பணம் திரும்பவும் சம்பந்தப்பட்ட நபரின்  கணக்கே அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் குறித்த நேரத்துக்குள் மது வகைகள் வாங்காவிடில் 10 சதவீத தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

   மேலும் பணம் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டதற்கு வழக்கம் போல் ரூ.10 கூடுதலாக தந்தால் மட்டுமே தரப்படும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கறாராக கூறினர் . வேறு வழியில்லாமல் மது பிரியர்கள் மது பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக கொடுத்து வாங்கி வந்தனர். தமிழகத்தில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக கொடுத்து வாங்கும் நிலையை ஒழிக்கவே முடியாதா என்று மது பிரியர்கள் மனம் நொந்தபடி அங்கிருந்து சென்றனர்.