வேலூரில் பாஸ்போர்ட், விசா இன்றி  வெளிநாட்டினரும் தங்குகிறார்களா? பெருகிக் கிடக்கும் லாட்ஜுகள்!சிறப்புக் குழு ஆய்வு அவசியம்!

வேலூரில் பாஸ்போர்ட், விசா இன்றி  வெளிநாட்டினரும் தங்குகிறார்களா?  பெருகிக் கிடக்கும் லாட்ஜுகள்!சிறப்புக் குழு ஆய்வு அவசியம்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

வேலூர் மாநகரம், மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்லும் முக்கிய நகரமாக விளங்குகிறது.

குறிப்பாக, 125 ஆண்டுகளைக் கடந்த வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக வருபவர்களில் சிலர் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய சூழலும் உள்ளது. இதனைப் பயன்படுத்தி, வெளிமாநிலத்தவர்கள் என்ற அடையாளத்தில் சிலர் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் வந்து முறையான ஆவணங்கள் இன்றி  தங்கி விடுகின்றனர். அது மட்டும் இன்றி இங்கிருந்து தமிழகம் முழுக்க சுற்றி வருகிறார்கள்.

2001ஆம் ஆண்டு வேலூரில் நடந்த பரபரப்புச் சம்பவம்!

கடந்த 2001ஆம் ஆண்டு வேலூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (NDFB) அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசாம் காவல்துறையினரின் உளவுத் தகவலின் அடிப்படையில், வேலூர் காவல்துறையினர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சுபலட்சுமி தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையில், அசாம் காவல்துறையினர் நேரடியாக வேலூருக்கு வந்து அதே விடுதியில் தங்கியிருந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.

அவர்கள்:

சம்புபா மட்டாலி

ராணி சம்புபா மட்டாலி

பரத் பிம்பாத்

ராஜேந்திர மட்டாலி

இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அக்காலகட்டத்தில் செய்திகள் வெளியாகின.

இந்தச் சம்பவம், வேலூரில் தங்கும் விடுதிகளின் கண்காணிப்பு மற்றும் வெளிமாநிலத்தவர்களின் அடையாளச் சரிபார்ப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்திய ஒரு நிகழ்வாக அமைந்தது.

வெளிமாநிலத்தவர்களுடன் வெளிநாட்டினரும் தங்குகிறார்களா?

தற்போது வேலூர் மாநகரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். இவர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலரும் வெளிமாநிலத்தவர்கள் என்ற அடையாளத்தில் வேலூரில் தங்கியிருப்பதாகப் புகார்கள் எழுகின்றன.

குறிப்பாக, சிலர் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு வேலூரில் தங்கியிருப்பதாகவும், இங்குள்ள சுற்றுலா முகவர்கள் மூலமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை காவல்துறையினர் உரிய ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

வெளிமாநிலத்தவர் என்ற காரணத்திற்காக யாரையும் சந்தேகப்படுவது சரியல்ல என்றாலும் கூட, அதே நேரத்தில், வெளிநாட்டினர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனுமதியற்ற தங்கும் விடுதிகள் – அதிகாரிகள் கவனிப்பார்களா?

வேலூர் மாநகரில் குடியிருப்புக்காகக் கட்டப்பட்ட பல கட்டடங்கள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சில தங்கும் விடுதிகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அவற்றுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டடங்களைத் தங்கும் விடுதிகளாக மாற்றும்போது, அதற்குரிய கட்டடப் பயன்பாட்டு மாற்ற அனுமதி, தீயணைப்புப் பாதுகாப்பு, உள்ளாட்சி விதிமுறைகள் மற்றும் காவல்துறை சார்ந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வேலூர் மாநகரில் வடபகுதியில் அதாவது வடக்கு காவல் நிலைய எல்லையில் பல்வேறு இடங்களில் அனுமதியற்ற ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும் எழுந்துள்ள புகார்களும் கவனிக்கப்பட வேண்டியவை.

சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும்!

வேலூர் மாநகரில் செயல்படும் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் வகையில், காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.

இந்தக் குழு மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்:

தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தல்.

தங்கியிருப்பவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்தல்.

வெளிநாட்டினர் தங்கியிருந்தால், அவர்களின் பாஸ்போர்ட், விசா மற்றும் உரிய அனுமதிகளைச் சரிபார்த்தல்.

வெளிநாட்டினர் தங்கும் விடுதிகள் தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தல்.

அனுமதியற்ற கட்டடப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.

இறையாண்மையும் பாதுகாப்பும் முக்கியம்!

வேலூர் மாநகரில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் தங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர்கள் முறையான அடையாள ஆவணங்களுடன் தங்குவதையும், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

2001ஆம் ஆண்டு வேலூரில் நடந்த சம்பவம் போன்றவை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, தங்கும் விடுதிகளின் கண்காணிப்பை வலுப்படுத்துவதுடன், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மாநகரின் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேலூர் மாநகரில் செயல்படும் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சிறப்புக் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.