நடுரோட்டில் கொட்டிய ரசாயனம்! நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி மீது புகார் — பணியிடைநீக்கம் செய்யக் கோரிக்கை!

நடுரோட்டில் கொட்டிய ரசாயனம்! நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி மீது புகார் — பணியிடைநீக்கம் செய்யக் கோரிக்கை!

செய்தி: ஜி. குலசேகரன்,

வாணியம்பாடி:28, வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம் சாலையில் கொட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசாயனக் கசிவால் துர்நாற்றம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரே, தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரசாயனங்களை அனுப்பும் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்பாக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயனக் கேன் உடைந்து, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான ரசாயனம் சாலையில் கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரசாயனம் சாலையில் பரவியதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் அலுவலகம் அருகிலேயே சம்பவம் நடந்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்களும் பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கத்தினரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை முற்றுகையிட்டனர். நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதான சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

அதிகாரி கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி கார்த்திகேயன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவர் அங்கு என்ன பேச்சுவார்த்தை நடத்தினார், ரசாயனக் கசிவுக்குப் பொறுப்பானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோருகின்றனர்.

அதிகாரி கார்த்திகேயன் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவரைப் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து விசாரிக்க வேண்டும் என்றும் நடவடிக்கை கோருவோர் வலியுறுத்துகின்றனர்.

ரசாயனப் பொருட்கள் சாலையில் கொட்டப்படுவது மட்டுமல்லாமல், தொழிற்சாலைக் கழிவுகள் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தினால் அதன் பாதிப்பு பொதுமக்களையும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் சென்றடையும். இத்தகைய சம்பவங்களில் அலட்சியம் காட்டப்படுகிறதா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்பதே மக்களின் வாதமாக உள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகரக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ரசாயனம் கொட்டியதற்கான காரணம் என்ன? சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மதிப்பிடப்பட்டதா? நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதிகாரி கார்த்திகேயன் மீதான புகாரில் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அலுவலகக் கோப்புகளோடு முடிந்துவிடக் கூடாது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ரசாயனக் கசிவு விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.