92 புகார்கள் மீது நடவடிக்கை எப்போது? ரூ.29 கோடி ஜி.எஸ்.டி. நோட்டீஸ்! கூலித்தொழிலாளியின் பெயரில் போலி நிறுவனம்?

92 புகார்கள் மீது நடவடிக்கை எப்போது?  ரூ.29 கோடி ஜி.எஸ்.டி. நோட்டீஸ்! கூலித்தொழிலாளியின் பெயரில் போலி நிறுவனம்?

செய்தி: ஜி. குலசேகரன்,

வாணியம்பாடி:தினக்கூலித் தொழிலாளியாகப் பணியாற்றும் ஒருவருக்கு ரூ.29 கோடிக்கும் அதிகமான ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பான நோட்டீஸ் வந்திருப்பது வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழைத் தொழிலாளர்களின் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கரிமாபாத் பகுதியைச் சேர்ந்த இக்பால் முஸம்மில் தனியார் தோல் தொழிற்சாலையில் தினக்கூலியாகப் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘இக்பால் ட்ரேடர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, 2022–2023ஆம் ஆண்டில் ரூ.29 கோடிக்கும் அதிகமான ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்தாமல் ஏய்த்ததாக அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குத் தாம் சென்றதில்லை என்றும், அங்கு எந்த வணிக நிறுவனத்தையும் நடத்தவில்லை என்றும் இக்பால் முஸம்மில் தெரிவித்துள்ளார். தனது தனிநபர் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் சம்பளப் பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"இந்த ஜிஎஸ்டி மோசடியின் பெயர் பில்லிங் என்று கோடுவேர்டு வைத்து அழைக்கிறார்கள். இவர்களுடைய ஒட்டுமொத்த பாஸ் பலர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் தான்.அவர்கள் பெங்களூரில் குடியிருந்து கொண்டு இந்த மாதிரி தில்லாலங்கடி வேலை செய்து மத்திய அரசினுடைய வருவாயை சீர்குலைத்து வருகிறார்கள். பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அரசியல் முதலைகள் இதில் அடக்கம்".

92 புகார்கள் மீது நடவடிக்கை எப்போது?

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பாக இதுவரை 92 புகார்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்தப் புகார்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தற்போதைய விசாரணை நிலை குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.

போலி நிறுவனங்களைப் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்வது நிரூபிக்கப்பட்டால், அது அரசின் வருவாய்க்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதேவேளையில், மோசடியில் தொடர்பில்லாத ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரிகளுக்கு உள்ளது.

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? மோசடியில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனரா? பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களையும் வங்கிக் கணக்குகளையும் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், அரசின் வருவாய் இழப்பைத் தடுக்கவும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.