மறைந்த சட்ட சாம்பியன் பாலி நாரிமன் குறித்து ஒரு பார்வை! இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சியை கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்!

மறைந்த சட்ட சாம்பியன் பாலி நாரிமன் குறித்து ஒரு பார்வை! இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சியை கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்!

ம.பா.கெஜராஜ்,

  மறைந்த பாலி எஸ்.நாரிமன் இந்திய சட்டத்துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த நபராக திகழ்ந்தவர். வழக்கறிஞராக  தனது சகாக்களை விட பல விதங்களில் மேம்பட்டவராக இருந்த பாலி நாரிமனின் மறைவு சட்டத்துறைக்கு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.

    அவரைப்பற்றி சொல்ல ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. அவர் ரங்கூனில் பார்சி மதத்தில் பிறந்தார். ஆரம்ப ஆண்டுகளில் மும்பையில் வசித்தார். இந்த நாட்டின் உள்ளார்ந்த மதிப்பீடுகளை அறிந்திருந்தார். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வழக்கில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வர அவர் உதவினார்.

  அவரது உரத்த குரல், வலிமையான வாதம், அசைக்க முடியாத தர்க்கம், சட்டத்தின் ஆழமான அறிவு, துணிச்சலான அணுகுமுறை ஆகியவற்றின் கலவையாக இருந்ததால், அவர் பலருக்கும் பயமுறுத்தும் எதிரியாக இருந்தார். அதேநேரத்தில், அவர் நீதிமன்றத்துக்கும் தனது தொழிலுக்கும் கடமை தவறாத நேர்மையாளராக இருந்தார்.

 அவர் 1971 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.  இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணி தலைவர்களின் வழக்குகளை வாதிட்டுள்ளார்.

   அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மே 1972- ஜூன் 1975 வரை இருந்தார். அப்போது இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலை பிரகடனப்படுத்தை கண்டித்து அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

  இதன்மூலம், இந்திரா காந்தியின் அரசாங்கத்தை திரும்பிப்பார்க்க வைத்தார்.ரதே போல் தான்  கோத்ரா படுகொலைக்குப் பிறகு மோடியின் குஜராத் அரசாங்கத்துக்கும் பாடம் கற்பித்தார்.

  இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக 1999-2005 வரை இவர் இருந்தார்.

  அவர் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், "எனது தந்தை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை. பி.ஏ பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இதனால் சட்டப் படிப்பை தவிர வேறு எதையும் என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி கணிதம், அறிவியல் ஆகியவற்றில் எனக்கு எந்தவித அறிவும் கிடையாது" என்று பாலி எஸ்.நாரிமன் கூறியுள்ளார்.

 அவரது வாதாடும் திறமையால் 1961ல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை பெற்றார். பின்னர் 1971ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். தன்னுடைய வழக்கறிஞர் தொழிலில் பிரபல வழக்குகள் பலவற்றை கையாண்டு கவனம் ஈர்த்திருக்கிறார்.

 மூத்த வழக்கறிஞர்களை எளிதாக வீழ்த்தக்கூடிய அவர், இளம் வழக்கறிஞர்களிடம் கனிவாகவும் அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்தார். சேது சமுத்திர திட்டம் வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நான் எனது வாதங்களை ஆரம்பித்தபோது, அரசு தரப்பில் நாரிமன் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அப்போது எதிர் தரப்பு வழக்கறிஞரான சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் அவரது வாதங்களை சுற்றுச்சூழல் கோணத்தில் கொண்டு சென்றார், பின்னர் வாதங்கள் முடித்ததும், "இப்படித்தான் ஒரு வழக்கை வாதிட வேண்டும்" என்றுவெளிப்படையாக  சொன்னவர்.

  1984ஆம் ஆண்டு போபால் விஷ வாயு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஆதரவாக நாரிமன் வாதாடினார். ஆனால் பின்னாளில் தனது தவறை உணர்ந்து வருந்தியதாக பேட்டி ஒன்றில் கூறினார். பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகித்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். இதையடுத்து 22 நாட்கள் சிறையில் இருந்தார். அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த பாலி எஸ்.நாரிமன் நேரில் ஆஜராகி வாதாடி தனது சிறப்பான வாதங்கள் மூலம் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் பெற்று தந்தார்.

  நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாதாடினார் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.