டெல்லி சலோ பேரணியில் சுட்டுக்கொல்லப்பட்ட 24 வயது விவசாயி! பதற்றம் தொடர்வதால் இரண்டு நாளுக்கு போராட்டம் நிறுத்திவைப்பு!

டெல்லி சலோ பேரணியில் சுட்டுக்கொல்லப்பட்ட 24 வயது விவசாயி! பதற்றம் தொடர்வதால் இரண்டு நாளுக்கு போராட்டம் நிறுத்திவைப்பு!

 ம.பா.கெஜராஜ்,

 நேற்று மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். பஞ்சாப்  அரியானா கானவுரி எல்லையில் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பஞ்சாப்பை சேர்ந்த 24 வயது இளம் விவசாயி கொல்லப்பட்டார்.  போலிசாரின் இந்த அரஜாக செயலால் 160 விவசாயிகள்¢ படுகாயமடைந்தனர்.

 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா உபியை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 13ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கினர். இவர்கள் டெல்லியிலிருந்து 200 கிமீ தொலைவில் பஞ்சாப் அரியானா மாநில எல்லைகளில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 இதற்கிடையே மத்திய அரசு நடத்திய 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் பருப்பு பருத்தி சோளம் உள்ளிட்ட 5 வேளாண் பொருட்களுக்கு அடுத்த 5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் அளிப்பதாக ஒன்றிய அரசு பரிந்துரைத்தது. இதனை நேற்று முன்தினம் விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்து மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

  அதன்படி விவசாயிகள் அறிவித்தபடி நேற்று காலை 11 மணி அளவில் டெல்லி நோக்கி செல்லும் போராட்டம் தொடங்கியது.

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை ஒட்டிய ஷம்பு எல்லையில் கான்கிரீட் தடுப்புகள் உள்ள பகுதியை விவசாயிகள் நெருங்கியதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

  அதே போல  பஞ்சாப்  அரியானா மாநில எல்லையில் உள்ள கானவுரி பகுதியிலும் இளம் விவசாயிகள் சிலர் தடுப்புகளை தாண்ட முயற்சித்ததால் போலீசார் பலமுறை கண்ணீர் புகை குண்டு வீசினார். இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.புகை குண்டிலிருந்து தப்பிக்க விவசாயிகளும் மாஸ்க் கண்ணாடி முககவசம் போன்றவற்றை அணிந்து எதற்கும் தயாராக போராட்ட களத்திற்கு வந்திருந்தனர்.

 இதனால் அடுத்தடுத்து கண்ணீர் புகை குண்டு வீசியதோடு ரப்பர் குண்டுகளால் விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரை சக விவசாயிகள் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அதில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவாட்டம் பாலோக் கிராமத்தை சேர்ந்த 24 வயது விவசாயி சுப்கரண் சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு பின்பக்க தலையில் ரப்பர் குண்டு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 மேலும் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 160 பேர் படுகாயம் அடைந்தனர். ஏற்கனவே போராட்ட களத்தில் மாரடைப்பு மற்றும் உடல் நிலை மோசமடைந்ததால் 2 விவசாயிகள் பலியான நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இளம் விவசாயி பரிதாபமாக கொல்லப்பட்டிருப்பது போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளது.

  அடுத்தகட்டமாக தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற விவசாயிகள் திட்டமிட்டுள்ளதால் போலீசார் டிரோன்களை பறக்க விட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் துணை ராணுவமும் அதிரடிப் படை போலீசாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  இளம் விவசாயி பலியானதைத் தொடர்ந்து டெல்லி நோக்கி செல்லும் 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாள் நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தேர்  அறிவித்தார்.