காவல் துறையில் அதிரடி மாற்றம்: சிபிசிஐடி டிஜிபியாக பாலநாக தேவி – 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

காவல் துறையில் அதிரடி மாற்றம்: சிபிசிஐடி டிஜிபியாக பாலநாக தேவி – 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ம.பா. கெஜராஜ்,

சென்னை: தமிழக காவல் துறையில் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் கே.மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இதில், மாநில சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாக இருந்த பி.பாலநாக தேவி, சிபிசிஐடி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சிபிசிஐடி டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக், மாநில சைபர் கிரைம் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி வித்யா ஜெயந்த் குல்கர்னி, பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு-2 துணை ஆணையர் எம்.ராமமூர்த்தி, க்யூ பிரிவு சிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அப்பிரிவில் பணியாற்றிய பி.கே.அரவிந்த், சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு-1 எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி. அர்பிதா ராஜ்புட், சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல், துணை ஆணையர் ஈஸ்வரன், சென்னையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாகவும், ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. வி.சரவணகுமார், தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகவும், அப்பிரிவில் இருந்த எஸ்.பி. டி.ரமேஷ் பாபு, திருநெல்வேலி மாநகர காவல் தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறையில் ஒரே கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணியிட மாற்றங்கள், பல்வேறு முக்கிய பிரிவுகளின் நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.