“4 ஆண்டு இன்ஸ்டாகிராம் காதல்… இரட்டைக் கொலையில் முடிந்தது!” – பல்லடத்தில் தாய், மகளை கொன்ற காதலன் கைது!
த. நெல்சன்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், தாய் மற்றும் மகளை கொலை செய்ததாக காதலனை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி (45). பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களது மகள் பூவரசி (25), படிப்பை முடித்துவிட்டு பல்லடத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அக்ஷய் என்பவருக்கும் பூவரசிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு பூவரசியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அக்ஷயுடன் பேசுவதை பூவரசி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பூவரசியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு அக்ஷய் வந்துள்ளார். அங்கு பூவரசி மற்றும் அவரது தாய் தனலட்சுமியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பூவரசி மற்றும் தனலட்சுமியை அக்ஷய் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அக்ஷயை பிடித்து கட்டி வைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
