“இடமும் மாறியது… படமும் மாறியது!” – ஓபிஎஸ்–செங்கோட்டையன் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

“இடமும் மாறியது… படமும் மாறியது!” – ஓபிஎஸ்–செங்கோட்டையன் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

ம.பா.கெஜராஜ்,

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, கட்சி மாறியது மற்றும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த தலைவரின் புகைப்படம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என்றும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்படாதது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், மூன்று மாதங்களில் வரலாற்றை படைக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும், “நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள். அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “முதலில் இடத்தை மாற்றியது அவர்தான்” என செங்கோட்டையனை குறிப்பிட்டு தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், செங்கோட்டையன் தனது இடத்தை மாற்றியபோதும் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்ற வேண்டாம் என்று முதல்வர் விஜய் கூறியதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பாக்கெட்டைப் பார்க்கும்போது இடமும் மாறியிருக்கிறது, படமும் மாறியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இதயங்களில் என்றும் வைத்திருப்போம் என்றும், படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்து செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருதரப்பினரையும் பேரவைத் தலைவர் சமாதானப்படுத்தி விவாதத்தை முடித்து வைத்தார்.