கஜானாவில் பலலட்சம் கோடி! கடன் ஒரு கோடி! பத்மநாபசாமிக்கே வெளிச்சம்!!

கஜானாவில் பலலட்சம் கோடி! கடன் ஒரு கோடி! பத்மநாபசாமிக்கே வெளிச்சம்!!

 ச.செல்வராஜ்,

 கஜானாவில் பலலட்சம் கோடி மதிப்பிலான வைர வைடூரியங்கள் உள்ள நிலையில் கடன் ஒரு கோடி வைத்திருப்பதால் இனி எந்த பொருட்களையும் சப்ளை செய்யமாட்டோம் என்று நுகர் பொருள் வாணிப கழகம் நோட்டிசு கொடுத்துள்ளது.

  இது பற்றின விவரம் வருமாறு,

   கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், நவரத்தின கற்கள் உள்பட விலை உயர்ந்த ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்படி கோவில் சர்வதேச அளவில் பிரபலமானது.

  கோவிலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 அப்படிப்பட்ட கோவில் ரூ.1 கோடி கடன் பாக்கியில் சிக்கி தவிப்பதாக வெளியான செய்தியால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

  பத்மநாபசாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற கோவில்களை போல் நடை வருமானமோ, காணிக்கை வருமானமோ அதிக அளவில் கிடைப்பதில்லை.

  இந்நிலையில் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் வகைக்கு கோவில் நிர்வாகம் மாதம் ரூ.1.25 கோடி செலவு செய்கிறது.   கோவில் அன்னதானம் மற்றும் அன்றாட பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிய வகையில், கேரள அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.73.57 லட்சம் கடன் நிலுவை இருந்தது.

 தற்போது வரை செலுத்த வேண்டிய கடன் ரூ.1 கோடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து, கடன் தொகையை உடனடியாக செலுத்த கோரி கேரள நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் கோவில் செயல் அதிகாரிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. பணத்தை செலுத்தாவிட்டால், பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.