தந்தை படித்த பள்ளியில் நீதிபதி நிர்மல்குமார்! கல்வி மட்டுமே நிலையானது என பேச்சு!
கு.அசோக்,
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கல்வி மட்டுமே நிலையானது. அதுதான் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை மாணவர்கள் மனதில் வைத்து படிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற (சென்னை) நீதிபதி நிர்மல்குமார் பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் நம்ம பள்ளி, நம்ம ஊரு திட்டத்துக்கு தனது சொந்த நிதி ரூ.8 லட்சத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமா£ வழங்கினார்.
மேலும் பள்ளிக்கல்வித் துறை திட்டமான மற்றும் சமூக பங்களிப்பு நிதி ரூ.1.70 லட்சம் என மொத்தம் ரூ.9.70 லட்சம் மதிப்பில், விழா அரங்க மேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகள் முடிவடைந்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட தேசதந்தை மகாத்மா காந்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் வ.முருகேசன் விழா அரங்க மேடையும், மேடையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் பேசும்போது, " என்னுடைய தந்தை ஏழை குடும்பத்தில் பிறந்தவர். கஷ்டப்பட்டு கல்வி பயின்று அரசு வேலையில் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். அவரின் கல்வி எங்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

படிப்பு ஒன்று தான் அனைவருக்கும் சொத்து. ஒரு மனிதனுக்கு கல்வி மட்டும் தான் வாழ்க்கையில் நிலையானது. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை மாணவர்கள் மனதில் வைத்து படிக்க வேண்டும்.
நம்மிடம் ஏதும் இல்லை என வருந்தக்கூடாது. படிப்பு இருந்தால் போதும். அதுவே மிகப்பெரிய சொத்து. விடா முயற்சியுடன், தைரியத்துடன் படித்தால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
அதேபோல, தாய்- தந்தை முக்கியம். அவர்களை எப்போதும் மறக்கக்கூடாது. என்னுடைய தந்தை (வ. முருகேசன் ) படித்த பள்ளியில் சிறப்பு வாய்ந்த மேடையை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து அமைத்து கொடுத்துள்ளோம்.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் " என்றார்.
நூற்றாண்டு காணும் அமரர் வ.முருகேசன் நினைவாக பள்ளி மாணவர்களுக்கு டி -சர்ட்களையும் நீதிபதி வழங்கினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம், வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கார்க், மாவட்ட எஸ்.பி சிபின், சென்னை மருத்துவக்கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை நிறுவன மேனாள் இயக்குநர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா உட்பட பலர் பங்கேற்றனர்.

admin
