திமுக ஒருபோதும் யாருக்கும் அஞ்சியது இல்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
கு.அசோக்,
திமுக ஒருபோதும் யாருக்கும் அஞ்சியது இல்லை - அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜா அடுத்த லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கி பேசுகையில்,
பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலங்களுக்கும் தனித்தனியாக சென்று வந்தனர். ஆனால், நமது முதல்வர் மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அரசின் முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் முகாம் நடத்தி, அங்கு அவர்களிடம் குறைகளை மனுக்களாக பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது, மக்கள் அரசை தேடிச்சென்ற காலம் மாறி, அலுவலர்கள் மக்களை தேடிவரும் நிலை வந்துள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு உட்பட பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை எல்லாம் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என்றார்.

முன்னதாக காட்பாடி சேர்க்காட்டில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,அப்போது கரூர் சம்பவத்திற்கு விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன், அவரை பார்த்து திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது.
எவரையும் பார்த்து அஞ்ச வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை என பேசினார்.
பாஜக உள்ளிட்ட தேசிய அளவிலான கட்சிகளுக்கு கூட திமுக ஒரு போதும் அஞ்சியதில்லை என தெரிவித்தார். தொடர்ந்து திமுக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் எந்த குற்றச்சாட்டை கண்டும் திமுக அஞ்சாது என கூறினார்.
மேலும் விஜய்க்கு போதுமான அளவிற்கு பக்குவம் இல்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் துரைமுருகன், அரசியலில் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

admin
