லேப்டாப் பெற்ற மாணவ மாணவிகளை மனதார வாழ்த்திய கலெக்டர்!

லேப்டாப் பெற்ற மாணவ மாணவிகளை மனதார வாழ்த்திய கலெக்டர்!

ஆர்.ரமேஷ்,

முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள், (05.01.2026) அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்" என்னும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

  அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 2,346 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 அப்போது மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

  முதலமைச்சர் தமிழ்நாடு வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு "உலகம் உங்கள் கையில்" திட்டத்தினை துவக்கி வைத்து மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.

   நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு 3,127 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது கட்டமாக தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2,815 இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

   அதனடிப்படையில், இன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  17 அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

  பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் தொழில்நுட்ப உலகில் சமமாக முன்னேற வேண்டும் என்பதே இந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். கல்வி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு துறைகளும் இன்று தொழில்நுட்பத்தை அதிகமாக சார்ந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

  ஆன்லைன் கல்வி டிஜிட்டல் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை எளிதாக அணுக இந்த மடிக்கணினிகள் உதவியாக இருக்கும். அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

  தற்போது மடிகணினிகளை பெற்ற மாணவர் மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என மாவட்ட ஆட்சியர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

 இவ்விழாவில், வாணியம்பாடி வட்டாட்சியர்; சுதாகர், கல்லூரி முதல்வர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

 வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.