முதலமைச்சர் விஜய்யிடம் மரணவாக்கு மூலம் அளித்த ஆட்டோ ஓட்டுநர்! குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் போலீஸ்! உடலை ஊருக்குள் விட மறுக்கும் தீய சக்திகள்!

ம.பா.கெஜராஜ், 

 தமிழ்நாடு முதலமைச்சருக்கு வீடியோ பதிவு மூலம் வாக்கு மூலம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு போலீசார் ஆதரவு கரம் நீட்டுவதுடன், பிரதே பரிசோதனைக்கான கடிதத்தை ஆஸ்பத்திரிக்கு வழங்காமல் சாவு வீட்டாரை அலைகழித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி உடலை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தார் பிரச்சனை செய்வதாவும் தெரிகிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினி (44) கோமதி (42) தம்பதியினா.¢ இவர்களின் மகள் தர்ஷினி (15)என்கின்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி கடந்த 14.04.2026 தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   அதனை தொடர்ந்து இறந்துபோன தர்ஷினி- யின் தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த  ரேவதி, நித்தின்குமார், இலக்கியா, செங்குட்டுவன் என்பவர்கள் தான் காரணம் என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செங்குட்டுவனை தவிர தேவகி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய மூன்று பேரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வெளியில் சுற்றித்திரிந்த செங்குட்டவன் இறந்து போன தர்ஷினியின் தந்தை ரஜினி மற்றும் ரஜினியின் மகன் சந்தோஷ் ஆகியோருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தும் ஜோலார்பேட்டை போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 அப்படியிருக்க தர்ஷினி இறப்பு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரேவதி, இலக்கியா மற்றும் நித்தின் குமார் ஆகிய மூவரும் ஜாமினில் வெளிவந்தனர். அவர்களில் ரேவதிக்கு அம்மா உணவகத்தில் பணியும் கிடைத்திருக்கிறது.

 இது ஒருபுறம் இருக்க இம்மூரும் அடிக்கடி இறந்து போன தர்ஷினியின் வீட்டுக்கு வந்து சந்தோஷ் மற்றும் அவரது தந்தை ரஜினியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உங்களால் என்ன செய்ய முடியும் நாங்கள் வெளியே வந்து விட்டோம் யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது என தெனாவட்டாக பேசியதாக. மேலும் அடுத்து சாவு நீதான் என்று ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  சிறைக்கு சென்று ஜாமினில் வெளிவந்திருக்கும் மேற்படி நபர்களும் செங்குட்டுவன் என்பவரும் கூட்டுச்சேர்ந்து தன்னையும், தன்மகனையும் இவ்வாறு அவமானப்படுத்துகிறார்களே என்று மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர் ரஜினி இன்று 10.06.2026 காலை அவரது வீட்டீல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   தன் மரணத்திற்கு யார் காரணம் என்பதை வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் என் விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் அனைத்து சங்கதிகளையும் மரண வாக்குமூலமாக வீடியோவில் பதிவிட்டிருக்கிறார்.

  இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் பிரேதத்தையும், விடியோவையும் கைப்பற்றினர்.

  பின்னர், வீடியோவில் ரஜினி குறிப்பிட்ட குற்றவாளிகள் பெயர்களை குறிப்பிடாமல் ரஜினியின் சாவுக்கு மனஉளைச்சலும், கணவன் மனைவி இடையே ஆன தகராறின் காரணமாகத்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தாரிடம்  போலீசார் எழுதி வாங்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

   இதனால் இறந்துபோன ரஜினி குடும்பத்தார் மற்றும் உறவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சாவுக்கு யார் காரணம் என்பதை சரியாக புகாரில் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் ரஜினியின் குடும்பத்தினர் கெஞ்சி கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் கண்ணீல் கண்ணீரை வரவழைத்தது.

   மேலும் இரண்டு மாதத்திற்கு முன் 15 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக  தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 ஜோலார்பேட்டை அருகே மகள் தற்கொலை தொடர்பாக சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர்கள் செய்த கொலை மிரட்டலால் ஆட்டோ டிரைவரான தந்தை தூக்கிட்டு தற்கொலை செயு கொண்ட விவகாரத்தில் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், அரசு மருத்துவமனையில் போஸ்ட்மர்டம் செய்ய கடிதம் கொடுக்காமல் மாலையில் வா, ராத்திரிக்கு வா என்று அலைகழித்து வருகிறார்களாம்.

  அதுமட்டுமின்றி ரஜினியின் உடலை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மிரட்டினார்களாம்.

 மிரட்டும் நபர்கள் தீய சக்தி கூட்டத்தைச் சேர்ந்தவர்களாம்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அக்ஷயா அணில் வாக்காரே ஐபிஎஸ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

    அனைத்து விஷயங்களையும்  புகாராக பெற்று இருக்கிறோம். ஊருக்குள் உடலை அனுமதிக்க மறுப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பலத்தை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என்று சொன்னார்.