யார் இந்த வி. டி. சதீசன்!

யார் இந்த வி. டி. சதீசன்!

மாநிலத்தின் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் தேர்வாகி உள்ளார். இந்நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில், காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 71 இடங்களைவிட கூடுதலாக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி ஆட்சி அமைப்பதற்கான அதிகாரத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றிய போதிலும், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு இடையே போட்டி கடுமையாக இருந்த நிலையில், இதில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் தலைமைக்கு அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.

இந்நிலையில்தான், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக, அதாவது மாநிலத்தின் முதல்வராக வி.டி.சதீசன் நியமிக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று (மே 14) அறிவித்தது.

இதையடுத்து, கேரளத்தின் முதல்வராக மே 18-ம் தேதி பதவியேற்க இருக்கிறார் வி.டி.சதீசன்.

யார் இந்த வி.டி. சதீசன்?

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெட்டூரில் 1964-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பிறந்தவர் வடசெர்ரி தாமோதர சதீசன். தாமோதர மேனன் - விலாசினி தம்பதியரின் மகனான இவர், தனது ஆரம்பக் கல்வியை பனங்காடு உயர்நிலைப் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தேவராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியிலும், சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தை ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியிலும் பயின்றார்.

தொடர்ந்து, வி.டி.சதீசன், கேரள சட்ட அகாடமி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பையும், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதுகலைச் சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார்.

பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக திறம்பட பணியாற்றினார்.

வி.டி. சதீசனின் அரசியல் பயணம்:

கல்லூரி மாணவராக இருக்கும்போதே இவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் படிக்கும்போதே, கல்லூரி சங்கத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய வி.டி.சதீசன், பின்னர் எம்ஜி பல்கலைக்கழக சங்கத்தின் தலைவராக தேர்வானார்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் இயக்கமான என்எஸ்யுஐ-ல் தேசிய செயலராக பணிபுரியத் தொடங்கினார்.

பரவூரில் தொடங்கிய தேர்தல் வாழ்க்கை:

பரவூருக்கும் வி.டி. சதீசனுக்கும் இடையேயான பந்தம் கால் நூற்றாண்டுக்கும் மேலானது. இடதுசாரிகளின் வலிமையான பகுதியாக இருந்து வந்த பரவூர் தொகுதியில் 1996-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.டி.சதீசன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ராஜுவிடம் 1,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தோல்வி அவருக்கு பெரும் வலியைத் தந்தாலும், தொகுதி மக்கள் மீதான அவரது நம்பிக்கை சிறிதும் குறையவில்லை.

தொகுதி மக்கள் மீதான தனது தொடர்பை ஆழப்படுத்தினார். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பாடுபட்டார்.

வசீகரமான அந்த இளைஞரின் உழைப்பு தொகுதி மக்களிடையே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

2001-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் வி.டி.சதீசன். இம்முறை, முன்பு தன்னை தோற்கடித்த பி.ராஜுவை 7,434 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார் சதீசன்.

மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயல்படுபவராகவும், மக்களோடு மக்களாக பழகுபவராகவும் இருந்த வி.டி.சதீசனை தொகுதி மக்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டனர். இதன் காரணமாக, 2006, 2011, 2016, 2021, 2026 என தொடர்ந்து ஆறு தேர்தல்களில் அவரை வெற்றி பெற வைத்தனர் பரவூர் தொகுதி மக்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை தோற்கடித்தார் வி.டி.சதீசன். 2006-ல் 7,792 வாக்குகள் வித்தியாசத்திலும், 2011-ல் 11,349 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-ல் 20,634 வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் 21,301 வாக்குகள் வித்தியாசத்திலும், 2026-ல் 20,600 வாக்குகள் வித்தியாசத்திலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை தோற்கடித்தார் வி.டி.சதீசன்.

வளர்ச்சியும் பின்னடைவும்:

தேர்தலில் தொடர் வெற்றியை பெற்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது பெரும் சவாலாகவே இருந்தது.

மணப்பெண்ணாக அல்லாமல், மணப்பெண்ணின் தோழியாகவே இருப்பவர் என காங்கிரஸ் கட்சியினர் அவரை கிண்டல் செய்வதுண்டு.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் தலைவர் பதவி, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, 2011-ல் அமைச்சர் பதவி என அவர் தவறவிட்ட பதவிகள் ஏராளம்.

கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டுவதில்லை; என்ன செய்வது என அவரே வருந்தி இருக்கிறார். எனினும், அவர் அவசரப்படாமல், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார்.

கட்சி மீதான தனது விசுவாசத்தை அவர் ஒருபோதும் குறைத்துக்கொள்ளவில்லை. அதற்கான பலனும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கத் தொடங்கியது.

கேரள சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், தமிழ்நாடு காங்கிரஸுக்கான மேலிட பொறுப்பாளர், கேரள காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார் வி.டி.சதீசன்.

இதன் தொடர்ச்சியாக, 2021-ல் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தபோது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் வி.டி.சதீசன்.

நிழல் தான் அவர் தற்போது வெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.