திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப தூணில் ஒளி! நீதிபதியை பதவி நீக்க குரலெழுப்பும் திருமாவளவன்!

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப தூணில் ஒளி! நீதிபதியை பதவி நீக்க குரலெழுப்பும் திருமாவளவன்!

 அ.கார்த்தீஸ்வரன்,

  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும் இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.

   திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவை தடை செய்ய மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (டிச.4) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளனர். மேலும், 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவில் விதி தவறு இருப்பதாக தெரியவில்லை.

   அரசு எதோ நோக்கத்துடன் வழக்கை தொடர்ந்துள்ளது. வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார். காவல் துறை பாதுகாப்பு வழங்காததாலேயே மத்திய படை செல்ல நீதிபதி உத்தரவிட்டார்' என்று தெரிவித்தனர்.

   இன்று காலை அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.

   நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.

   இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையையே திரட்டிச் சென்றார். மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை.

   அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல.

மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது. அவருடைய செயல் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

   மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எவ்வித தடையுமின்றி தீபம் கோயில் நிர்வாகத்தால் ஏற்றப்பட்டது. ஆனால், 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத பழக்கமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் என்ன?' இவ்வாறு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு மனுதாரர் தரப்பில், "தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோயில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர்" என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தேர்தல் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது, இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லை." என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி.

  கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது, அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை.

    வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.

    முதலில் அந்த மலைக்கு பிரச்சினை செய்தார்கள். இங்கிலாந்து வரை சென்று குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது. முதல்வரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோயில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சினையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் திமுக அரசு செயல்படுகிறது.

   வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்கிறது. திமுக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார்.

   அதற்கான வாய்ப்பே இல்லை. தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதல்வரின் பிரித்தாளும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

   துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். திமுக தேர்தல் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது, இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பதை அரசு விரும்பவில்லை. அதனை முருகன் பார்த்துக் கொள்வார்.

 பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது என்று சொன்னார்.

என்று நயினார் கூறிச்சென்றார்.

  திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.