100 நாள் வேலை சரிவர வழங்கப்படவில்லை!மக்கள் மறியல்!
ஜி.கே.சேகரன்,
100 நாள் வேலை சரிவர வழங்கப்படவில்லை - அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமம் காக்கங்கரை அடுத்த நாராயணபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், காக்கங்கரை அடுத்த நாராயணபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாராயணபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் முறையாக ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் சாலைகளால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறினர்.

மேலும், கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை சரிவர வழங்கப்படவில்லை என்றும், வேலை கேட்டாலும் வேலை வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் குடும்பங்களை நடத்த முடியாமல் பெரும் பொருளாதார சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஒன்று திரண்டு, திருப்பத்தூர் - போச்சம்பள்ளி செல்லும் முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் வரை போராட்டம் தொடரும்" என பொதுமக்கள் உறுதியுடன் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே நாராயணபுரம் மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
