மதுரை கலெக்டரும்.... போலீஸ் கமிஷனரும் பாவம் சார்!!! பற்றி எரியும் திருப்பரங்குன்றம் விவகாரம்!
அ.கார்த்தீஸ்வரன்,
பற்றி எரியும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கை நேற்று மாலை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும், "இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றி நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என அவரது உத்தரவில் குறிப்பிட்டார்.
அப்படியிருக்க தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சினை என்றும் கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் தமிழக அரசு விதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதன்படியே அரசு செயல்படுகிறது என்றும், புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்து வருவதால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடிக்கிறாது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வந்தவர்களை தடுத்ததால், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யனுடன் மனுதாரர் ராம. ரவிக்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் மனுதாரர் ராம ரவிக்குமார் கூறும்போது, ''இரவு 8.30 மணி வரை நம்பவைத்தும், காத்திருக்க வைத்தும் அவமானப்படுத்தினர். இதற்கு காரணம் காவல் ஆணையர்தான். நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநகர காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன்'' என்றார்.
வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் கூறியபோது, ''மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உயர் நீதிமன்றமே. அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசும், போலீஸாரும் அமல்படுத்த மறுக்கிறது. இதை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதே நடைமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கினால் நீதித்துறையின் மாண்பே கேள்விக்குறியாகிவிடும்'' என்று சொன்னார்.
மனுதாரர்கள் தரப்பில் கலெக்டரையும் கமிஷனரையும் குறை சொன்னாலும் கூட அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்துவதில்லை.
மேலிருந்து உத்தரவையே அவர்கள் பணிந்து செய்வதால் இந்த பிரச்சனை அவர்களை நோக்கி திரும்பியது.
பாவம் அவர்கள்.

admin
