தலைமை செயலாளரை அதிரடியாக மாற்றிய தேர்தல் ஆணையம்!கொதிக்கும் மு.க.ஸ்டாலின்!
ம.பா.கெஜராஜ்,
தமிழக டிஜிபி வெங்கட்டராமன் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலர் தவிர ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும்கூட, தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.

admin
