ஆவினில் நஷ்டமாம்:- "டீ மேட்" அறிமுகம் செய்ய திட்டம்!

ம.பா.கெஜராஜ்,
ஆவின் பால் நிறுவனத்தில் ஏகப்பட்ட நஷ்டமாம். ஆகவே அதைக்கட்டுப்படுத்த புதிய பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறார்களாம்.
தமிழகத்தில், ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இது, கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மி.லி., 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களின் பால், 500 மி.லி., 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் மட்டுமின்றி ஹோட்டல்கள், 'கேன்டீன்'கள், டீக்கடையினர் ஆவின் பால் வாங்குவதில் மும்முரம் காட்டுகிறார்கள்.
ஆகவே ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கொள்முதல் குறைந்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பால் ஆவின் நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது.. எனவே, ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்ப்பதற்கு, புதிய முயற்சி எடுக்கும் விதமாக, 'டீ மேட்' என்ற பெயரில், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஏற்கனவே, பயன்பாட்டில் இருந்ததுதான் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது, மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை விட, கூடுதல் விலையில் இது விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புதிய பால்பாக்கெட்டின் பெயர் "டீ மேட்" என்று கூறப்படுகிறது.