அரசு பள்ளி சிறார்களுக்கு டிபன் ஏற்பாடு!

ம.பா.கெஜராஜ்,
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் விருவிருப்பாக செய்யப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, சென்னையில் முதலில் காலை உணவு திட்டம் வட சென்னை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலங்கள் 1, 3, 4, 5 ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் சமையல் கூடம் எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து மொத்தம் 6 இடங்கள் தேர்வு செய்தனர்.
அதன்படி காலை உணவு தயாரிக்க தாழங்குப்பம் அம்மா உணவகம், அன்னை சிவகாசி நகர், மாதவரம் புதிய பஸ் நிலையம், ஜெ.ஜெ.நகர், எஸ்.என்.ஷெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகங்களிலும் ஆறாநகரில் உள்ள பள்ளிகூடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு சிறப்பு சமையல் கூடம் அமைக்கப்படுகிறது. அம்மா உணவக தற்போதைய சமையல் கூடத்தை பயன்படுத்தாமல் காலை சிற்றுண்டிக்காக தனி சமையல் கூடம் கட்டப்படுகிறது. அதுபோல உணவு பொருட்களை பாதுகாத்து வைக்க தனி அறையும் அமைக்கப்படுகிறது.
இதற்கான சமையல் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.