கட்சிப் பதவி ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை? தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் புகார் – அரக்கோணத்தில் பரபரப்பு!

கட்சிப் பதவி ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை? தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் புகார் – அரக்கோணத்தில் பரபரப்பு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் சசிகுமார் மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கட்சி ரீதியான பழக்கத்தின் மூலம் ஒன்றியச் செயலாளர் சசிகுமாருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கட்சியில் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி அவர் தன்னுடன் நெருங்கிப் பழகியதாகவும் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் தனது வீட்டுக்கு வந்த சசிகுமார் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொடர்ந்து பலமுறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் கர்ப்பமானதாகவும், இதுகுறித்து தெரிவித்தபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், பின்னர் கருக்கலைப்பு ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் கட்சியைச் சேர்ந்த சிலர் தன்னை மிரட்டி வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுக்கும் ஒன்றியச் செயலாளர்!

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவு வெளியாகாத நிலையில், காவல்துறை விசாரணையின் முடிவுகளே அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்கும்.

கட்சியில் பொறுப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் நடைபெற்றதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் எழுந்துள்ள முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.