லைவ் லுக்கின் கருத்துக்கணிப்பு பலித்தது! விசில் சத்தத்தில் அதிமுக கோட்டைகள் தகர்ந்தன! தாராபுரம் மதுராந்தகத்தில் தவெக வெற்றி!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
லைவ் லுக்கிங் இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு 100% பலித்து இருக்கிறது. இது பேமென்ட் செய்தி தளம் அல்ல... என்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் தற்போது தவெக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது இந்தத் தேர்தலின் முக்கிய அரசியல் திருப்பமாக அமைந்துள்ளது.
தாராபுரத்தில் சத்யபாமா… மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல்!
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா 62,851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 53,013 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 41,484 வாக்குகளையும் பெற்றனர்.
சத்யபாமா 9,838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தாராபுரத்தில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 70,916 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 50,774 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 45,338 வாக்குகளையும் பெற்றனர். மரகதம் குமரவேல் 19,421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இங்கும் அதிமுக மூன்றாவது இடத்தையே பிடித்தது.pp

அக்டோபர் 4-ல் லைவ்லுக் வெளியிட்ட கள மதிப்பீடு!
இந்த இடைத்தேர்தல் முடிவுகள், லைவ்லுக் முன்வைத்த முந்தைய கள மதிப்பீட்டை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
அக்டோபர் 4-ஆம் தேதி லைவ்லுக் வெளியிட்ட செய்தியின் தலைப்பே தேர்தல் களத்தில் தவெகவின் வெற்றி வாய்ப்பை முன்னிறுத்தியது.
தற்போதைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுடன் அந்த முந்தைய கள மதிப்பீட்டை ஒப்பிட்டுப் பார்ப்பது, செய்தி நிறுவனங்களின் கள ஆய்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
“பல்டி பாமா” விமர்சனம்… “வெற்றி பாமா” முடிவு!
அரசியல் விமர்சனங்களில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினால் “பல்டி பாமா” எனச் சத்யபாமா கிண்டல் அடிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இன்று அவர் பெற்றுள்ள வெற்றி அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தீர்ப்பின் வழியாகப் பதிலளித்துள்ளது.
அரசியலில் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இறுதியில் வாக்காளர்களின் தீர்ப்பே தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறது என்பதை இந்த வெற்றி நினைவூட்டுகிறது.
ஸ்டாலின் மற்றும் எடப்பாடியின் அரசியல் கணக்கில் பின்னடைவு!
அதிமுகவின் வசம் இருந்த இரண்டு தொகுதிகளிலும் புதிய வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றி பெறலாம் என்ற அரசியல் எதிர்பார்ப்புக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றிருப்பது, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான கட்சிக்கு அரசியல் ரீதியாக எழுந்துள்ள சவாலாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் மு க ஸ்டாலின் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து விட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அதேபோல் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு தொகுதிகளிலும் திமுக சார்பாக பணம் விளையாடியதாக கூறப்பட்டது.
அதன் காரணமாகவோ என்னவோ ஓரளவுக்கு கௌரவமாக தோற்று இருக்கிறார்கள்.
விஜய் தனது அரசியல் மேடைகளில் முன்வைத்த விமர்சனங்களை நினைவூட்டும் வகையில், இந்த முடிவுகள் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
அதிகார பலம் குறித்து லைவ்லுக்கின் கள ஆய்வு!

ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை; தவறான முறையில் பிரயோகித்ததாகவும் லைவ்லுக்கின் கள ஆய்வில் தெரியவில்லை என்பதே எங்களது மதிப்பீடு.
அரசியல் சார்பின்றி, களத்தில் திரட்டிய தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி அமைக்கப்பட்டுள்ளது.
லைவ்லுக் எந்த அரசியல் கட்சியிடமிருந்தும் கிப்ட் வவுச்சர்களை பெற்றுக்கொண்டு செய்திகளை வெளியிடும் தளம் அல்ல. இது பரிசுப் பொருட்களை பெறாத செய்திச் தளம்.
எந்தக் கட்சியின் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், ஆதாரங்கள் மற்றும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்வதே எங்களது ஆசிரியர் நிலைப்பாடு.
இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தோற்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று மூத்த செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலர் மீடியாக்களில் உளறிக் கொட்டி எல்லாம் நினைவிருக்கலாம்.
இரு தொகுதிகள்… 109 உறுப்பினர்களாக உயர்ந்த தவெக!
இந்த இரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளால் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சிய காலித் தொகுதிகளிலும் சட்ட நடைமுறைகள் முடிந்து தேர்தல் நடத்தப்படும்போது, மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஜனநாயகக் கோரிக்கையாகும்.
தாராபுரமும் மதுராந்தகமும் வெறும் இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல; முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தவெக சார்பில் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், அதிமுக இரு இடங்களிலும் மூன்றாவது இடத்துக்குச் சென்றிருப்பதும் தமிழக அரசியலில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன.
குறிப்பாக, தாராபுரம் தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்திருப்பது, இந்தத் தேர்தலின் முக்கிய அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
ஆக, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற நாள் முதல் இதுவரை வென்றதே இல்லை என்கிற வழக்குச் சொல்லை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மேலும் நிரூபிப்பார் என்றும் தெரிகிறது
வாக்காளர்களின் தீர்ப்பே இறுதியானது; அரசியல் கணக்குகள் பின்னாளில் மாறலாம்!

admin
