காதலியின் உயிரைப் பறித்த காதலன்… மலைப்பகுதியில் புதைத்த கொடூரம்! 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள் தண்டனை!!
செய்தி: கு. அசோக்
ராணிப்பேட்டை, அக்.9.
வாலாஜாபேட்டையில் காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 17 வயது பள்ளி மாணவியைக் கொலை செய்து, மலைப்பகுதியில் புதைத்த வழக்கில் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பல்லி வெங்கடாசலபதி தெருவைச் சேர்ந்த முனிரத்தினத்தின் மகள் ரேகா (17).
இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Oகடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ரேகா, பின்னர் கடைக்குச் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, ரேகாவின் தந்தை முனிரத்தினம் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24), ரேகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகத் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சந்தேகத்தின் காரணமாக அவரை மேல்வெங்கடாபுரம் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அருண்குமார் கொலை செய்ததும், பின்னர் தனது நண்பரான வாலாஜாவைச் சேர்ந்த ராஜா (24) உதவியுடன் உடலை அங்கே புதைத்ததும் தெரியவந்ததது.
இதையடுத்து அருண்குமார், ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, ரேகாவைக் கொலை செய்து புதைத்த குற்றத்திற்காக அருண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ராஜாவை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பள்ளி மாணவியின் கொலை வழக்கில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin
