பீலாவின் மறைவால் ஐஏஎஸ் அதிகாரிகள் சோகம்!
ஜி.சாந்தகுமார்,
நிர்வாகம் துறையில் தடம் பதித்த பீலா வெங்கடேசன் மறைவால் தமிழக மக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் மத்தியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் (56) தமிழக அரசின் முக்கிய அதிகாரியாக பணியாற்றி மக்கள் மத்தியில் இடம் பெற்றவர்.
சென்னையின் கொட்டிவாக்கத்தில் பிறந்த இவர், சிறுவயது முதலே கல்வியிலும் சமூக ஈடுபாட்டிலும் சிறந்து விளங்கினார். இவரின் தந்தை எல். என். வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றியவர். தாயார் ராணி வெங்கடேசன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இத்தகைய பொதுசேவைச் சூழலில் வளர்ந்த பீலா, இயல்பாகவே சமூக சேவைக்கு ஈடுபாடு காட்டியவர்.
பள்ளிக் கல்விக்குப் பிறகு உயர் கல்வியில் சிறந்து விளங்கிய இவர், 1992ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ் தாஸ் அவர்களை மணந்தார். இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்தை அன்போடு பேணிய போதும், சமூகத்திற்கு சேவை செய்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.
1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்று பணியாற்றினார். நிர்வாக அனுபவத்தில் தெளிவு, மக்களோடு பழகும் தன்மை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவை இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தன.
பல துறைகளில் தன் சேவையால் பொதுமக்களுக்கு நன்மை செய்தவர் எனினும் மருத்துவ துறையில் செயலாளராக இருந்த போது கொரோனா கால பணிகளை சிறப்பாக செய்து முடித்து அரசுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்தவர்.
அக்காலத்தில் அடிக்கடி தொலைகாட்சிகளில் தோன்றி மக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் சொன்னவர்.
இந்நிலையில் அவர், சமீபகாலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னை தேனாம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு அரசியல், நிர்வாகம் மற்றும் சமூக வட்டாரங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
பீலா வெங்கடேசன் மறைந்தாலும் அவரது பணிகள் மக்கள் மனதில் நிலை நிற்கும்.

admin
