அரசு தலைமை மருத்துவர் தற்கொலைக்கு சக மருத்துவர் காரணமா?

அரசு தலைமை மருத்துவர் தற்கொலைக்கு சக மருத்துவர் காரணமா?

ம.பா.கெஜராஜ்,

அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் சிவ சுப்பிரமணியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சக மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஒருவரையும் நோக்கி அப்பகுதி வாசிகள் கை நீட்டுகிறார்கள்.        

 இது பற்றின விவரம் வருமாறு,

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வருபவர் மருத்துவர் சிவசுப்பிரமணியம், 50 வயதாகும் அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.

  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பெற்று அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வந்ததுடன், மாலை நேரத்தில் வீட்டில் தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார்.

  அப்படியிருக்க நேற்று முன்தினம் பிப்-03- நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்து மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.

  அதன் அடிப்படையில் நேற்று அவர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

 பின்னர் கிளினிக்கில், செல்போனை வைத்து விட்டு வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. மேஜையில் வைத்திருந்த செல் போன் அழைப்புமணி ஒலித்துக் கொண்டே இருந்தது.

 அவர் வழக்கமாக சிகெரெட் புகைப்பதற்காக இப்படி தனியே ஒதுங்குவாராம். சிகெரெட் புகைத்து முடித்தவுடன் கிளிக்குக்கு வந்துவிடுவாராம்.

 ஆனால் நேற்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது ஊழியர், வழக்கமாக மருத்துவர் புகைக்கும் இடத்துக்கு சென்று பார்த்திருக்கிறார், அங்கு அவர் இல்லை.

  அக்கம் பக்கம் பார்த்து விட்டு பின்னர் வீட்டின் பக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

  அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

 பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

 இறந்த மருத்துவர் சிவசுப்பிரமணியத்துக்கு வித்யா என்ற மனைவியும், குகன் என்ற மகன், சுவேதா என்ற மகள் உள்ளனர்.

 மகன் குகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 நிர்வாகத்தில் என்ன பிரச்சனை என்று விசாரித்த போது, தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஏற்கனவே பல்வேறு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டாராம். அதற்கு அவர் மீது தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது.

 குறிப்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஆளுங்கட்சியின் பிரமுகரின் மகன், ஒரு கவுன்சிலரின் வாயிலாக இந்த தொல்லையை ஏற்படுத்தியதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல் போனில் யாரிடமோ கெஞ்சி பேசிக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

  அநேகமாக அது அரசியல் பின்னணி கொண்ட சக மருத்துவராக இருக்கலாம் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

       மருத்துவர் சிவசுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்கின்ற செய்தி வெளியான அதே நேரத்தில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அரசியல் பின்னணி கொண்ட மருத்துவர் நெஞ்சுவலி என்று மார்பை பிடித்து கொண்டு அரசு மருத்துவமனையை விட்டு  வெளியேறி வேறு மருத்துவமனைக்கு பறந்து விட்டாராம். 

முருகனின் மறு பெயர் கொண்ட அந்த மருத்துவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவாரா? அல்லது அரசு செல்வாக்கு இதில் தலையிட்டு அவரை தப்ப விடுமா என்பது பொதுமக்களின் மெகா டன் கேள்வியாக உள்ளது.