அப்பாடா.... காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியானது! 9+1 தொகுதிகள் ஒதுக்கீடு!

ம.பா.கெஜராஜ்,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரியின் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. ஆகவே திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, கொமதேக, ஐயுஎம்எல், மநீம கட்சிகளுடன் தொகுதிகளை பங்கிட்டு வருகிறது. இதில் கொமதேகவுக்கு நாமக்கல், ஐயுஎம்எல்-க்கு ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்பின், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடும் தற்போது முடிவுற்றுள்ளது. புதுச்சேரி உட்பட மொத்தம் பத்து தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன் அடுத்ததாக எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டதும் பிரச்சாரம் சூடுபிடிக்கும்.