என்னது? தமிழகத்தில் அதிமுகவுக்கு மூன்றாவது இடமா! நம்புகிறமாதிரியா இருக்கு??
ம.பா.கெஜராஜ்,
தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின் படி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுகவுக்கு 28 சதவீதமும், காங்கிரஸுக்கு 20 சதவீதமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 17 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 19 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும், பிற கட்சிகளுக்கு 16 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பார்க்கும் போது திமுக கூட்டணியில் திமுகவுக்கு 24 முதல் 28 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிமுக 1 முதல் 3 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பாஜக 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் தமிழகத்தில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்கு சதவீதத்தையும், அதிக தொகுதிகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கைப்பற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிமுக கடந்த முறை போல் கீழிறங்கினாலும், அந்த கட்சிக்கென இருக்கும் வாக்கு சதவீதம் பாஜகவுக்கு கீழ் செல்லுமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல் பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்றாலும் 3 லிருந்து 19 என்ற இடத்திற்கு செல்லுமா என்றும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
ஆக கருத்துக் கணிப்பு என்பதை நம்பமுடியாமல் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள்