15 வருட போராட்டம்! செவிடர்கள் காதில் சங்கு ஊதிய குடியாத்தம் மக்கள்!

ஜி.கே.சேகரன்,
குடியாத்தம் அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர 15 ஆண்டுகளாக போராடிவரும் கிராம மக்கள்.அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட எர்த்தாங்கல்,ஏரியான்பட்டி, காவாய் மேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
ஏரியான்பட்டி முதல் ஏரிபட்டறை மற்றும் காவாய் மேடு முதல் ஆயில் கான் பட்டி வரை சாலைகள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதிக்காக போராடி வருகின்றனர்.
சாலைகள் மிகவும் சிதலம் அடைந்து இருப்பதால் நாள்தோறும் விவசாய நிலத்தில் அறுவடை செய்த விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பால் கொள் முதலும் சென்று வரும் போதும் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்திலும் மிதி வண்டிகளிலும் செல்லும்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்லும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செவிடர்கள் காதில் மக்கள் சங்கு ஊதியிருக்கிறார்கள்....! இனிமேலாவது அவர்கள் சீர் படுத்துவார்களா?