வேலூர் சிறையில் இருந்து தப்பிய கைதி 3 ஆண்டுகளுக்கு பின் கைது!

வேலூர் சிறையில் இருந்து தப்பிய கைதி 3 ஆண்டுகளுக்கு பின் கைது!

ஜி.கே.சேகரன்,

 வெட்டுவாணம் பகுதியை சேர்ந்த காசி என்பவரை 2018-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்த நந்தா (எ) முத்துகுமார் கடந்த 21.02.2022 அன்று  வேலூர் சிறையில் இருந்து தப்பியோடினார். இந்நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த அவரை வேலூர் தனிப்படை போலீசார் சுற்றி வலைத்து கைது செய்தனர்.

 வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தா (எ) முத்துக்குமார். இவர் பணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2018-ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

  இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு இவருக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து முத்துகுமார் 2019-ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வந்தார்.

  இந்நிலையில், 21.02.2022 ஆண்டு அன்று காலை மத்திய சிறைக்கு எதிரே உள்ள சிறைதுறைக்கு சொந்தமான கட்டிடத்தை சுத்தம் செய்யும் பணியில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 21-பேரை சிறைக்காவலர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.

  அதில், நந்தா (எ) முத்துக்குமாரும் ஒருவர். மதிய உணவு இடைவேளையின் போது  அவர் தப்பியோடியுள்ளார். சிறை சுற்றுவட்டார பகுதியில் தேடியும் நந்தா கிடைக்காததால்  கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர்.

  இந்த நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த நந்தா (எ) முத்துகுமாரை வேலூர் தனிப்படை போலீசார் சுற்றிவலைத்து கைது செய்து வேலூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

 

  1. கொள்ளைக்காரியை தப்பவிட்ட அரக்கோணம் போலீஸார்!

கு.அசோக்,

  அரக்கோணம் நகர காவல் துறையினரால் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தப்பி ஓடிய சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள அலங்கார பொருட்கள் சிலைகள் போன்றவற்றை கொளையடித்த வழக்கில் அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   இந்நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஜனனி என்ற 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை நகர காவல் துறையினர் கைது செய்து கோயில்களில் காணாமல் போன பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  காவல் துறையினரின் முழு விசாரணை நடைபெற்ற பிறகு அப்பெண்ணை சிறையில் அடைக்க தகுந்த பாதுகாப்போடு வேலூர் செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்து அந்தப் பெண் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி தப்பி சென்றதாக தகவலானது வெளியாகி உள்ளது.

  இதனை அடுத்து அரக்கோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் அப்பெண்ணை குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்..

  இந்தச் சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.