கூட்டணி ஆட்சியா? உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்ட எடப்பாடி!

ம.பா.கெஜராஜ்
"கூட்டணி ஆட்சி என்கிற பேச்சே இல்லையே" என நேற்றைய பிரஸ் மீட்டில் உணர்ச்சிவசப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தை திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக தங்கள் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது. அப்படியிருக்க ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. அந்த நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.
அப்படியிருக்க நேற்று காலை சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்த பழனிசாமி, வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு,
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக - பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாக எவ்வாறு அமைந்தது?
வலுவான கூட்டணியா? வலுவில்லாத கூட்டணியா என்பது தேர்தலில் தான் தெரியும். ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்த வேண்டும்.
அந்த வகையில் ஆளும் திமுக கட்சியை வீழ்த்த வேண்டும், ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றாக இணைத்து தேர்தலில் போட்டியிட நாங்கள் முயற்சி செய்தோம். அதன் முதல்கட்டமாக பாஜக எங்களோடு இணைந்திருக்கிறது.
தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கின்றன. சில விஷயங்களைதான் வெளியில் பேச முடியும்.
அதிமுக - பாஜக கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என திமுக விமர்சிப்பது குறித்து?
இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்களது இஷ்டம். அதை கண்டு ஏன் திமுகவினர் எரிச்சல்படுகின்றனர்? ஏன் பயப்படுகின்றனர்? அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
அதிமுக பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த கட்சி, பொன்விழா கண்ட கட்சி அதிமுக. அந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு என்ன கஷ்டம்?. நாங்கள் கூட்டணி வைப்பது எங்கள் இஷ்டம். எங்களது கூட்டணி பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை. எல்லாமே மக்கள், வாக்காளர்கள் முடிவுசெய்வது.
சென்னையில் நடந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக - பாஜக கூட்டணி அரசு என்று சொன்னாரே?
அவர் கூட்டணி அரசு என்று சொல்லவே இல்லை. நீங்கள் தவறாக புரிந்துகொண்டு ஏதேதோ வித்தையெல்லாம் காட்டுகிறீர்கள். தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுவிடுங்கள். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார்.
அப்படியெல்லாம் (கூட்டணி அரசு) அவர் சொல்லவே இல்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி என்றும், தமிழகத்துக்கு என்னுடைய பெயரை கூறினார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
ஞாபகப்படுத்துகிறோம்:- எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித்ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.
அதன் பின்னர் மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, ''சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப்போகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை'' என்று சொன்னார்.