பெண்களின் ஆர்பாட்டத்தை செய்தியாக்குவியா? சொல்லி... சொல்லி... அடித்த தாலிபான்கள்! ஆப்கனில் எழுத்துரிமை பறிப்பு!

பெண்களின் ஆர்பாட்டத்தை செய்தியாக்குவியா? சொல்லி... சொல்லி... அடித்த தாலிபான்கள்! ஆப்கனில் எழுத்துரிமை பறிப்பு!

ஆ.கவுசர்,

 தாலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்குண்ட பின்னர் அங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

அதை எதிர்த்து பெண்கள் அங்கு ஆர்பாட்டம் நடத்தி வரும் வேளையில், அந்தப் பெண்களின் கைகளில்  "தாலிபன்களை அங்கீகரிக்காதீர்கள்" என்கிற பதாகைகள் இருந்தன, அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய தாலிபன்களும் இருந்தனர்.

இந்த சூழலில் ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தும் தா£லிபான்கள், போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்று வருகிறார்கள்.

 குறிப்பாக இந்த ஆர்பாட்டக் குரல் ஊடகங்களில் வெளியாகிவிடக்கூடாது என்பதில் தாலிபான்கள் கடுமை காட்டிவருகிறார்கள்.

 

  அப்படியிருக்க தாலிபன்களால் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு செய்தியாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

  நீமத் நக்தி மற்றும் டாக்கி தர்யாபி, என்கிற அந்த இரண்டு செய்தியாளர்களும் "எடிலாடோர்ஸ்" என்ற புலனாய்வு இதழில் பணியாற்றுகிறார்கள்.

 மேற்படி காயமடைந்த இந்த செய்தியாளர்கள் இருவரும், கடந்த வாரம் காபூலில் நடத்தப்பட்ட பெண்களின் ஆர்ப்பாட்டத்தைச் பரபரப்பாக செய்தியாக்கினர்.

 ஆகவே தாலிபன்கள் அவர்களை பிடித்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

 செய்தியாளர்களை தாலிபான்கள் பிடித்து சென்றனர் என்ற தகவலை அறிந்த ஆப்கன் பத்திரிகை உலகம் சற்று நடுங்கித்தான் போனது.

 ஏனெனில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆப்கன் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் “ரெய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்”, இந்திய போட்டோகிராபர் "டேனிஷ் சித்திக்" என்பவரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.

 இதனாலேயே தற்போதைய சம்பவத்தில் செய்தியாளர்கள் நடுங்கினர்

 போதாக்குறைக்கு, தாலிபான்களால் காயம்பட்ட செய்தியாளர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் ஆப்கன் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

  இது குறித்து பிடிபட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கையில், தாங்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தாலிபன்கள் பலர் தங்களைக் கட்டைகளாலும் இரும்பு ராடுகளைக் கொண்டும் அடித்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்ததாக குறிப்பிடுகின்றனர்.