எடப்பாடி பழனிச்சாமியின் விட்டுகொடுக்காத மன்போக்கால் அதிமுக என்னவாகும்!

எடப்பாடி பழனிச்சாமியின் விட்டுகொடுக்காத மன்போக்கால் அதிமுக என்னவாகும்!

 ம.பா.கெஜராஜ்,

எடப்பாடி பழனிச்சாமியின் விட்டுகொடுக்காத மனபோக்கால் அதிமுக என்னவாகுமோ என்று அக்கட்சியின் தொண்டர்களும், நலம் விரும்பிகளும் கவலை கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

   அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்துவரும் நிலையில், உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால், அக்கட்சியில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது.

  2016-2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், உள்கட்சி பூசல் வெளியே தெரியவில்லை. ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையில், அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் பூதாகரமானது.

 முதலில், ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவும், டி.டி.வி.தினகரனும வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து  ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார்.

  அந்த வரிசையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

   அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த கே.ஏ.செங்கோட்டையன், அதை நடைமுறைப்படுத்த 10 நாள் கெடு விதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

  கே.ஏ.செங்கோட்டையன் நேற்று இந்த கருத்தை தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறிய நிலையில், இன்று திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

   அதாவது, கே.ஏ.செங்கோட்டையன் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதித்தார். அவர் ஆலோசனை நடத்தி முடித்த சற்று நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து 2 அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்தன.

   கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், நேற்று கே.ஏ.செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்கள் நம்பியூர் கே.ஏ.சுப்ரமணியன், எம்.ஈஸ்வர மூர்த்தி, என்.டி.குறிஞ்சிநாதன், எம்.தேவராஜ், எஸ்.எஸ்.ரமேஷ், கே.எஸ்.மோகன் குமார் ஆகியோரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

   அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கே.ஏ.செங்கோட்டையன், "அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் 'முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

  ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளு காலம் பதில் சொல்லும்." என்று கூறியுள்ளார். இனி அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

  இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வலுவான கூட்டணியுடன் களம் காண்கிறது.

   நடிகர் விஜய்யும் போட்டியிடுவதால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணியுடன் களம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதை எடுத்துக்கூறும் வகையில்தான், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

   அ.தி.மு.க.வின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளும்போது இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், கே.ஏ. செங்கோட்டையன் சுட்டிக்காட்டுபவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்று அவர் நினைக்கிறார் என்பது புரிகிறது. அ.தி.மு.க.வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.