முதல்வர் கடிதத்துக்கு பிரதமர் ரெஸ்பான்ஸ் கொடுப்பார்!

முதல்வர் கடிதத்துக்கு பிரதமர் ரெஸ்பான்ஸ் கொடுப்பார்!

  ம.பா.கெஜராஜ்,

 நேற்று நடந்த செஸ் போட்டி துவக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் இது போன்ற வாய்ப்புகளை பிரதமர் தமிழகத்துக்கு அடிக்கடி தரவேண்டும் என்று பேசினார். அப்படியிருக்க மறு தினமே பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்.

 அதாவது, சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்த உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 குறிப்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். 

கடிதத்தின் விவரம் வருமாறு,

 சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை பிரதமருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை குறிப்பிட்டுள்ள, முதலமைச்சர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 ஏற்கெனவே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் கடிதத்துக்கு கண்டிப்பாக ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.