சீனியர் அமைச்சரின் தொகுதியை கழற்றிவிட்ட திமுக மேயர்!
க.கங்காதரன்,
வேலூர் மாநகராட்சியில் அமைச்சர் துரைமுருகன் பகுதி, நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு.
திமுக மேயரை கண்டித்து, திமுக துணை மேயர் தலைமையில் 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு .திமுக தலைமையிடமும் புகார்.
திமுக மாநகர செயலாளர் மேயரின் செயலுக்கு உடந்தையா?
வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டமானது மேயர் சுஜாதா தலைமையில் 18 ந்தேதி நடைபெற்றது. இதில் துணை மேயர் சுனில் மற்றும் அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் 53 பேர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய துணை மேயர் சுனில் ஒன்றாவது மண்டலத்தில், எந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை. கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒன்றாவது மண்டலத்தில், காட்பாடி பகுதியில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பள்ளிகளுக்கு உபகரணங்கள் தருதல், புத்தகங்கள் தருதல், செய்தித்தாள் விநியோகம் என அனைத்திலும் இப்பகுதி புறக்கணிக்கபடுகிறது.
பல முறை எடுத்து சொல்லியும் மாநகராட்சி அலுவலர்களும், மேயரும் கண்டு கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் கொண்டு வரப்ப்பட்ட 98 தீர்மானங்களில் காட்பாடி பகுதிக்கு எந்த நன்மையுமில்லை.
எனவே ஒன்றாவது மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதால், இக்கூட்டத்தில் பங்கேற்று எந்த பயனுமில்லை என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒன்றாவது மண்டலத்தை சேர்ந்த 13 மாமன்ற உறுப்பினர்கள் (அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள்) ஒட்டுமொத்தமாக துணை மேயர் சுனில் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தனது பகுதியும் புறக்கணிப்பப்படுகிறது. கூட்டத்தில் பேசுவதற்கு போதுமான நேரமும் வழங்குவதில்லை எனக்கூறி பாமக மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவனும் வெளிநடப்பு செய்தார்.
திமுக மேயரை கண்டித்து, திமுக மாமன்ற உறுப்பினர்களே, அதுவும் அமைச்சர் தொகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்களே மன்றத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் பொதுசெயலாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொகுதியே கடந்த மூன்றாண்டுகளாக புறக்கணிக்கபடுகிறது. திமுகவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் துரைமுருகன்.
இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிலேயே அதிக முறை சட்டமன்றத்திற்கு தேர்வானவர் துரைமுருகன்.
கட்சிக்காரர்கள் மீது புகார் மற்றும் ஏதாவது பிரச்சனை என்றால் திமுக தலைவருக்கு அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர் பொதுச் செயலாளர் துரைமுருகன்.
இவ்வளவு முக்கியம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் துரைமுருகனின் பகுதி
திமுக ஆட்சியிலேயே திமுக மேயரால் புறக்கணிக்கப்படுவதும், திமுக மேயரை கண்டித்து, திமுக துணை மேயரும்
திமுக கவுன்சிலர்கள் 13 பேரும் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்ததும், தலைமைக்கு புகார் அளித்ததும் வேலூர் மாவட்ட திமுக அரசியலை புரட்டி போட்டு உள்ளது.
இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக மேயர் சுஜாதாவின் இந்த நிதி புறக்கணிப்புக்கு பின்னால் எம்.எல்?ஏ, வேலூர் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன்
இருப்பதாகவும் திமுக தொண்டர்களிடையே பேசப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழ்நிலையில் அமைச்சர் துரைமுருகனின் பகுதியை மேயர் நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதும், திமுக மேயரை கண்டித்து திமுக துணை மேயர் மற்றும் 13 திமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, முதலமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளது திமுகவிற்கு ஒரு பின்னடைவே என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

admin
