'மோடி ஸ்டோரி' சேனலில் எமோஷனாக மாறிய பிரேமலதா விஜயகாந்த்!

'மோடி ஸ்டோரி' சேனலில் எமோஷனாக மாறிய பிரேமலதா விஜயகாந்த்!

ம.பா.கெஜராஜ்,

 'மோடி ஸ்டோரி' என்ற சேனலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் 'பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர்' என  குறிப்பிட்டார்.

  பிரேமலதாவின் பேச்சு அடங்கிய தகவல் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

 அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒவ்வொரு முறையும் விஜயகாந்தின் பிறந்த நாளன்று அவரே தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார். விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதபோது என்னைத் தொடர்புகொண்டு, 'நான் உங்களுக்கு மூத்த சகோதரன் போன்றவர். ஏதாவது உதவி தேவைப்பட்டால் நிச்சயம் செய்ய தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

   இந்த வார்த்தைகளை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்கமாட்டேன். நானும், விஜயகாந்தும் மோடியிடம் மிகவும் சுதந்திரமாகப் பேசுவோம். மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிப்போம். அப்போதெல்லாம் அவர் ஒரு பிரதமர் என்பது போலவே எங்களிடம் பேசமாட்டார்.

   அந்த வகையில் பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர். திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, விஜயகாந்துடனான உறவைப் பற்றி பேசியிருந்தார். அதுமட்டுமின்றி அழகான ஒரு கடிதத்தையும் விஜயகாந்துக்காக அவர் எழுதியிருந்தார். இதெல்லாம் எங்களது வாழ்நாளில் மிகவும் பெருமையான தருணங்கள்.

  பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக முதல்முறையாகப் பதவியேற்றபோது, அந்த அரங்கில் கூடியிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்களும் இடம்பெற்றிருந்தோம். அப்போது பிரதமர் மோடி, விஜயகாந்தின் பெயரையும், எனது பெயரையும் குறிப்பிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் உழைத்ததற்காகப் பாராட்டினார். விஜயகாந்துக்கு 'பத்மபூஷண் விருது' வழங்கப்பட்டதையும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

   பிரதமர் மோடி எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரை அவருடைய மனிதநேயம், எளிமை எதுவும் மாறவில்லை. இதுவே மக்களின் இதயங்களுக்கு அவரை அழைத்துச் செல்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.