மதங்களை முன்னிறுத்தாமல் மனிதநேயத்தை முன்னிறுத்துவோம்! கிறிஸ்மஸ் வாழ்த்து சொன்ன வேலூர் பிஷப்!

ம.பா.கெஜராஜ்,

 தென்னிந்திய திருச்சபையின் வேலூர் பேராயர் எச்.சர்மா நித்தியானந்தம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரித்திருக்கிறார். மதங்களை நாம் முன்னிறுத்தாமல் மனிதநேயத்தை முன்னிறுத்துவோம் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.

 பேட்டியின் விவரம்:-  எல்லா துதியும் கனமும் மகிமையும் இயேசுவுக்கே.

2025 ஆம் ஆண்டின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் 8 மாவட்டங்களை உள்ளடக்கியது தென்னிந்திய திருச்சபை வேலூர் பேரூராயம் சார்பில் எல்லாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன்.

 கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல, எல்லாருக்கும் கிறிஸ்மஸ்.

 கிறிஸ்மஸ் எளிமையானதாக இருந்தாலும் அது வலிமையான செய்திகளை இந்த நாட்டுக்கு கொடுக்கிறது.

 இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் சமத்துவத்தோடு, மதங்களைக் கடந்து மனிதநேயத்தோடு வாழ இந்த ஆண்டு நமக்கு ஒரு அழைப்பை விடுத்து இருக்கிறது.

 இயேசு கிறிஸ்து தொலைவிலிருந்து நம்மை ஆசீர்வதிக்கிற கடவுள் அல்ல, நம்முடன் இருக்கிற கடவுள். இம்மானுவேல் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதற்கு அவர் நம்மோடு பயணிக்கிறார் என்று பொருள்.

  ஆகவே எல்லோரும் சுபிட்சமாய், சந்தோஷமாய் இந்த பண்டிகை காலத்தை அனுசரிக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

 இயேசுவானவர் எளிமையான இடங்களுக்கு சென்றார், இன்றைக்கு பணக்காரரை நோக்கி நாம் செல்லாமல் ஏழை எளியவர்களை நோக்கி நாம் சென்று அவர்களுக்கு இருப்பதை கொடுத்து பகிர்ந்து வாழ கிறிஸ்மஸ் நம்மை அழைக்கிறது.

  இந்த கிறிஸ்மஸ் சாதாரண மக்களிடத்திலே சேர வேண்டும் என்கிற அழைப்பையும் கொடுக்கிறது.

 கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும், மருத்துவமனையில் சுகத்திற்காக காத்திருக்கின்ற மக்களை நோக்கி நாம் சென்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

  சாலை ஓரத்தில் இருக்கிற எளிய மக்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஆகவே இந்த அருமையான நேரத்திலே வேலூர் ஊடகத்துறையை மிகவும் சிறப்பாக பாராட்டி உங்கள் வழியாக இந்திய நாட்டுக்கும் தமிழ்நாடு எல்லா மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நான் தெரிவிக்கிறேன்.

  சுமூகமாக எல்லாரும் சமத்துவமாக வாழ எல்லாம் வல்ல கடவுள் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவாராக.

 கிறிஸ்துமஸ் சமாதானத்தை கூறி அன்புடன் வாழ அழைப்பை கொடுக்க வேண்டும்.  கிறிஸ்மஸ் எல்லோரும் இணக்கமாக வாழ கற்பிக்க வேண்டும்.

 மதங்களை நாம முன்னிறுத்தாமல் மனிதநேயத்தை முன்னிறுத்தி இந்திய நாட்டை பாதுகாப்பது, சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற சிறப்பு மிக்க பண்புகளை வாழ்ந்து காட்டுவது தான் கிறிஸ்துமஸ்.

 எல்லோருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன், ரம்ஜான் வருகிறது முகமதியருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.  கடவுளுடைய சமாதானம் உங்கள் அனைவருடனும் இருக்க எல்லாம் வல்ல கடவுளை நான் பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்துச்செய்தி சொன்னார்.