அரசு சிறார் இல்லத்தில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! 16 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு – சென்னை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!
கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை பகுதியில் சமூக பாதுகாப்புத் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.
பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் தாய், தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குற்றப் பின்னணியில் ஈடுபட்டதாக கூறப்படும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், குடியாத்தம் சேவூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனும் இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, 16 வயது சிறுவன், 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், இல்லத்தின் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 16 வயது சிறுவன், சென்னை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

admin
