குடிநீர் லாரி மூலம் கைதி தப்பினார்! இரண்டு வாரம் கழித்தும் தெரியாத திருச்சி முகாம் அதிகாரிகள்!

குடிநீர் லாரி மூலம் கைதி தப்பினார்! இரண்டு வாரம் கழித்தும் தெரியாத திருச்சி முகாம் அதிகாரிகள்!

சுவாமிநாதன்,

  ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில், கடந்த 2019 ம் ஆண்டு  சென்னை லிலியன் ஆட்ரகௌவ் என்பவரை சி.சி.பி. போலீசார் கைது செய்து திருச்சி முகாம் சிறையில் அடைத்திருந்தனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இந்த சிறப்பு முகாம் உள்ளது.   

 மேற்படி நபர் பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

 இந்த சிறை முகாமில் ஆகஸ்ட் 31- ம் தேதி அதிகாலை சிறைக்காவலர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.

 அப்போது லிலியன் அங்கு இல்லை.  பதற்றம் அடைந்த சிறைக்காவலர்கள் சிறை வளாகம் முழுவதிலும் தேடியும் ஆள் இல்லை.

 இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது பகீர் தகவல்கள் கிடைத்தன.

  கடந்த சில நாட்களாகவே லிலியன் சிறையில் இல்லை என்று விசாரணை அதிகாரிகளிடம் சக கைதிகள் கூறியுள்ளனர்.

  கலவரமடைந்த போலிசார் மேலும் தீவிரமாக விசாரணை செய்த போது குடிநீர் ஏற்றி வந்து செல்லும் டேங்கர் லாரியில் மறைந்து கைதி லிலியன் தப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

  அப்படியிருக்க லிலியன் சென்னையில் தங்கியிருந்த ஏரியா மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

 அப்படியானால் அவர் வெளிநாடு தப்பி செல்ல இயலும் என்று சந்தேகித்த திருச்சி மாநகர போலீசாரின் பரிந்துரையின்படி, தமிழக டிஜிபி அலுவலகம் கைதி லிலியன் ஆட்ர கௌவ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர்.

 ஆனாலும் லிலியன் ஏற்கனவே வெளிநாட்டுக்கு பறந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

  லிலியன் இலங்கை தப்பி சென்றிருக்கலாம் எனக்கூறும் போலீசார் விமானம் மூலம் இலங்கை சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால், திருச்சியில் இருந்து ரயில் மூலம் ராமேஸ்வரம் அல்லது நாகை சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கை சென்றிருக்கலாம் என்கிற கூற்றுக்கு வந்துள்ளனர்.

 முகாம் சிறையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் லிலியனுக்கு உதவியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் இந்த விஷயத்தில் சற்று குழம்பித்தான் போயுள்ளனர்.