ரூ.634 கோடி ஊழல் புகார்: “நேரு மீது நடவடிக்கை எடுக்கவில்லை” – உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
Ma.ba.Gajaraj,
நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியபோதும், அப்போதைய திமுக அரசு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியிருந்தபோதும், முந்தைய திமுக அரசு கே.என்.நேரு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
மேலும், அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையின் கடிதம் ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எனவே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் நேரு தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இதற்கு நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் பி.எச்.அரவிந்த் பாண்டியன், தங்களது தரப்பு வாதங்களை முழுமையாகக் கேட்காமலேயே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாக வாதிட்டனர்.
மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு அந்த மனுவை வாபஸ் பெற அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை நேருவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பான இந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளது.

admin
