காட்பாடி தொழிலதிபர் சேகர் வீட்டில் ரூ.5 கோடி நகை, பணம் மாயம்! வேலைக்கார பெண்கள் உட்பட 6 பேர் கைது!

காட்பாடி தொழிலதிபர் சேகர் வீட்டில் ரூ.5 கோடி நகை, பணம் மாயம்! வேலைக்கார பெண்கள் உட்பட 6 பேர் கைது!

செய்தி: கு.அசோக்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் வீட்டில் சுமார் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான நகை, பணம் களவு போனது. 

இப்படி களவு போனதாக எழுந்த புகாரில் 2 பெண்கள் உட்பட 6 பேரை விருதம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்த சேகருக்கு காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன.

மேலும், இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் உறுப்பினராக இருந்தவர் என கூறப்படுகிறது.

சேகரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனால் திருமண அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அவர் தொடர்ந்து பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்து சிறிது சிறிதாக சுமார் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் வேலை செய்து வந்த ஊசூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் நகைகளை மேலும் 4 பேரிடம் கொடுத்ததாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் சேகர் வீட்டில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகை, பணம் மாயமானதாக கூறப்படும் சம்பவத்தில் போலீசார் பரபரப்பாக கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர்.