“சிவபெருமான்தான் கஞ்சா வாங்கி வரச் சொன்னார்!” காவி உடையில் 900 கிராம் கஞ்சா கடத்திய சாமியார் கைது!
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர் மாவட்டம் காட்பாடியில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 900 கிராம் கஞ்சா கடத்தி வந்ததாக சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திராவில் இருந்து வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தில் இருந்த ஒரு கைப்பையில் 900 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சா இருந்த கைப்பை காவி உடை அணிந்திருந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (44) என்பதும், திருவண்ணாமலை சப்தகிரி கோவில் பகுதியில் சாமியார் போல் இருந்து யாசகம் பெற்று வந்ததும் தெரியவந்ததாக போலீசார் சொன்னார்கள்.
மேலும், கஞ்சா குறித்து போலீசார் விசாரித்தபோது, “சிவபெருமான்தான் என்னை கஞ்சா வாங்கி வரச் சொன்னார்” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடமிருந்து சுமார் ரூ.9,000 மதிப்புள்ள 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காட்பாடி போலீசார், வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சாமியார் வேடத்தில் கஞ்சா கடத்தி வந்ததாக கூறப்படும் சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
