காவல் நிலையத்தில் மிரட்டப்பட்ட ஊடகவியாளர்! பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார்!

கு.அசோக்,
அரக்கோணம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வ செயல் நகர காவல் நிலைய வளாகத்தில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார் அளிக்கப்படவிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவரை காவனூர் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னால் நிர்வாகி தெய்வ செயல் என்பவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார்.
அந்த சம்பவம் குறித்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டு கடமையாற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்து திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வ செயலின் சதி செயல் என அந்த கல்லூரி மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நரேந்திர பிரசாத் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு முன்னாள் திமுக நிர்வாகி தெய்வச் செயல் தனது வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மூலமாக பல்வேறு கருத்துகளை கேலி செய்யும் வகையில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஸ்டேட்டஸையும் வைத்து சில தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்பு ஆனது.
இந்நிலையில் இன்று செய்திகள் குறித்து தெரிந்து கொள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நரேந்திர பிரசாத்தை அங்கு ஏற்கனவே விசாரணைக்காக வந்த தெய்வ செயல் கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசி உள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த சக செய்தியாளர்கள் முன்னிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நரேந்திர பிரசாத் நகர காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை வழங்கினார்.
காவல் நிலைய வளாகத்தில் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், நகர காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் நிறைந்த பகுதியிலே இது போன்ற செய்தியாளருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நரேந்திர பிரசாத் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்காததை குறித்து வடக்கு மண்டல ஐஜிக்கும், அதன் தொடர்ச்சியாக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு புகார் அளிக்க பத்திரிகையாளர் சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார் அளித்தால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் அறிய வேண்டும் அல்லவா?