பெண் சிசு கொலைகள் அதிகரிப்பு! விழிப்புணர்வு போதவில்லையா?
ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் பெண் சிசு கொலைகள் அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் நம் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்த குடும்பமே துக்க வீடாக மாறிவிடக்கூடிய அறிவின்மை நிலவியது. இந்த சூழலில் பெண் சிசுவை கொலை அளவுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். அதையெல்லாம் மீறி வளரும் பெண் குழந்தைகளை படிப்பதற்கே பெற்றோர் அனுமதிப்பதில்லை.
ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாக மாறிவருகிறது. உயர் பதவிகளில் இன்றைக்கு பெண்கள் வீற்றிருக்கிறார்கள்.
"குறிப்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப.அவர்கள் வேலூர் ஆட்சியராகவும், முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. அவர்கள் இராணிப்பேட்டை ஆட்சியராகவும், க.சிவசொந்தரவள்ளி, இ.ஆ.ப அவர்கள் திருப்பத்தூர் ஆட்சியராகவும்" உயர் பதவியில் உள்ளனர்.
இவர்களைப் போலவே மாநிலத்தில் பெண் பிரிவினர் பலர் உயர் பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் பெண் சிசுக்கள் பராமரிப்பதற்காக பல்வேறு விழிபுணர்வு பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் கூட நாட்டில் ஆங்காங்கே பெண் சிசு கொலைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் மூட நம்பிக்கை இன்றளவுக்கும் நிலவுவதே அதற்கு காரணம்.
உதாரணத்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன், வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனை அருகிலேயே ஒரு பெண் சிசு உடல் கால்வாயில் வீசப்பட்டது. இதற்காக குழந்தையின் தந்தை விநோத் மற்றும் பாட்டி சுமதி எனபவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தை இறந்து பிறந்ததாகவும் ஆகவே அதை கால்வாயில் வீசினார்கள் என்று விசாரணை அதிகாரிகள் சொல்லியிருப்பது நம்பும்படியாக இல்லை.
அந்த சோகம் முடிவதற்குள் பக்கத்து மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஒரு பெண் சிசுவை தாயே கொன்று போட்டிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு,
பெத்லேகம் பகுதியை சேர்ந்த அக்பர் பாஷா - ஆஸ்லியா தஸ்லீம் தம்பத்தியினருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்களுக்கு 3 ஆவதாக ஹர்ஃபா பாத்திமா என்ற குழந்தை பிறந்துள்ளது.
ஆஸ்லியா தஸ்லீம், 3 ஆவது கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இருந்த போதும்,3 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், மன உளைச்சலில் இருந்த ஆஸ்லியா தஸ்லீம், குழந்தை ஹர்ஃபா பாத்திமாவை கீழ் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு, குழந்தை தவறி விழுந்து இறந்ததாக நடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
எத்தனை விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கினாலும் இப்படிப்பட்ட மூடர்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.

admin
