மதுரை மீனாட்சி கோவிலின் சொத்தை அபகரித்த அதிகாரிகள்!
ம.பா.கெஜராஜ்,
சமீபத்தில் கரூர் கோவில் சொத்தை ஆட்டையை போட்ட விவகாரமும், அதனைத் தொடர்ந்து பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நில மோசடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மோசடி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளைச் சொத்து போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடான பட்டா மாற்றம் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் சார் பதிவாளர்கள், முன்னாள் வட்டாட்சியர், விஏஓ உள்ளிட்ட 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரை ராஜா மற்றும் துரை ராணி அறக்கட்டளை சார்பில், கடந்த 1930-ம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட உயிலின்படி, மதுரை அழகர் கோவில் சாலை, பிபீகுளம் ஹக்கிம் அஜ்மல் கான் சாலையில் அமைந்துள்ள 1.79 ஏக்கர் பரப்பளவிலான "அசோக விலாஸ்" பங்களா மற்றும் தோட்டம், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலின் தர்மப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த உயிலில், இச்சொத்தை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, வேறு வகையில் உரிமை மாற்றம் செய்யவோ கூடாது என்றும், வாடகை வருவாயை மட்டுமே கோயில்களின் பூஜை, நெய்வேத்தியம், பிரசாதம், அன்னதானம் மற்றும் கல்வி உதவி உள்ளிட்ட தர்மப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இருந்த போதும் கடந்த 2016-ம் ஆண்டு கோயில் பெயரில் இருந்த பட்டா, தனிநபர்களின் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கோட்டாட்சியர் விசாரணையின் அடிப்படையில் பட்டா மீண்டும் கோயில் பெயருக்கு மாற்றப்பட்டது.
மேலும், கோயில் அனுமதியின்றி இச்சொத்தில் எந்தவித பதிவும் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலும், 2018-ம் ஆண்டு கோயிலின் பெயர் நீக்கப்பட்ட நிலையில், 10 பேர் இணைந்து அச்சொத்தை மீண்டும் விற்பனை செய்ததாகவும், பின்னர் 2021-ம் ஆண்டு அந்த ஆவணங்களின் அடிப்படையில் பதிவு மற்றும் அடமானப் பத்திரங்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், நில மோசடியில் தொடர்புடையதாக ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா உள்ளிட்டோர், முன்னாள் விஏஓ, முன்னாள் வட்டாட்சியர், முன்னாள் சார் பதிவாளர்கள் மற்றும் பத்திரப் பதிவில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி), 120(பி) (கூட்டுச் சதி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடிக்கு உள்ளான சொத்தின் மதிப்பு ரூ.60 கோடிக்கு மேல் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு அதிகாரிகள் கோவில் சொத்தையும் விடமார்களா?

admin
