.“கோவை மாணவர் கொலையில் அரசியல் செய்யவில்லை; சட்டம் தன் கடமையைச் செய்யும்” – பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி!

.“கோவை மாணவர் கொலையில் அரசியல் செய்யவில்லை; சட்டம் தன் கடமையைச் செய்யும்” – பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி!

கு. அசோக்,

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் பாடநூல் கிடங்கில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் மற்றும் கழக அதிகாரி வெண்ணிலா ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது, கிடங்கில் காணப்பட்ட குறைபாடுகளை லயோலா மணி கேட்டறிந்தார். சில இடங்களில் போதிய அளவில் விளக்குகள் எரியாதது உள்ளிட்ட சிறிய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சென்னையில் உள்ள அலுவலகத்தைத் தொடர்புகொண்டு குறைபாடுகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் லயோலா மணி கூறியதாவது:

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின்படி, இன்று பாடநூல் கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சில குறைபாடுகள் இருந்தன. அவற்றை விரைந்து சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த ஆட்சி மாணவர்களுக்கான ஆட்சி. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் படிக்கும் பாடநூல் கிடங்குகள் தூய்மையாகவும் முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது நான்காவது இடமாக இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

பாடநூல் தொடர்பான பல்வேறு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. மாணவர் சேர்க்கை அதிகரித்ததே அதற்குக் காரணம். அந்தப் பிரச்சினையும் சரிசெய்யப்பட்டுள்ளது. உருது பாடநூல்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டன. பள்ளிகளில் இருந்து புத்தகங்களின் எண்ணிக்கை தவறுதலாக தெரிவிக்கப்பட்டிருக்கலாம். ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்; அவை உடனுக்குடன் சரிசெய்யப்படும்.

பாடநூல் கழகத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அவை மீட்கப்படும். யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ஆந்திராவில் பாடநூல்கள் அச்சிடப்பட்டன. ஆனால், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உறுதியாக உள்ளனர். எனவே, பாடநூல்களை தமிழகத்திலேயே அச்சிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இங்கு ஆய்வு செய்ததில் சில சிறிய பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை விரைவில் சரிசெய்யப்படும். பாடநூல் பற்றாக்குறையையும் தொடர்ந்து சரிசெய்து வருகிறோம். அனைத்து இடங்களுக்கும் தேவையான புத்தகங்கள் சென்றடைந்துள்ளன.

என்னைப் போன்ற ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கியுள்ளார். அனைவரும் வியக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும்.

கோவை கல்லூரி மாணவர் கொலை விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.

இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தெரிவித்தார்.