வாரிசு அரசியல் காஷ்மீர் முதல் குமரி வரை நடக்கின்றன!இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழாவில் பிரதமர் பேச்சு!
ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய அரசிலமைப்பு சட்ட தின விழா இன்று நடந்தது. அதில் காஷ்மீர் முதல் குமரி வரை பல கட்சிகள் வாரிசு அரசியலை நடத்துகின்றன என பிரதமர் பேசினார்.
அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ௐபிர்லா,பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இருக்கிறது. அரசியலமைப்பு சட்ட தினம் என்பது நாடாளுமன்றத்தை வணங்கும் தினம் ஆகும்.
டாக்டர் அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திரபிரசாத் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான ஆளுமைக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள்.
அரசியல் சாசனத்தை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். டாக்டர் அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை எப்போதும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
அரசியலமைப்பு சட்ட தினமும் கொண்டாடப்பட வேண்டும். ஏனென்றால் நமது பாதை சரியானதா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்காகவே கொண்டாடப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தது அம்பேத்கர், சபாநாயகருக்கு மரியாதை செய்யாமல் இருப்பதற்கு சமமானது.
இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் ஜனநாயக தன்மை இழக்கும்போது அரசியல் சாசன உணர்வு பாதிக்கப்படுகிறது.
காஷ்மீர் முதல் குமரி வரை பல கட்சிகள் வாரிசு அரசியலை நடத்துகின்றன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அரசியல் சாசனத்தின் மீது பற்றுக்கொண்ட மக்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.
ஒரு குடும்பத்தால் தலைமுறை தலைமுறையாக கட்சி நடத்தப்பட்டு முழு கட்சி அமைப்பும் ஒரு குடும்பத்துடன் இருந்தால் அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பிரச்சினையாகும்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஜனநாயகத்தன்மையை இழக்கும் போது அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும்.
உட்கட்சி ஜனநாயகத்தை பின்பற்றாத கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காக்கும்? நாட்டுக்கு எதிரான ஊழலை கண்டும் காணாமலும் இருப்பது மக்களுக்கு எதிரானது. இந்தியா இத்தகைய நெருக்கடியை நோக்கி செல்கிறது.
இளைஞர்களின் மனம் துவண்டு உள்ளதால் மக்களை கொள்ளையடிக்கும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தில் உரிமைகளுக்காக போராடிய போதும் கடமைகளுக்கு தயாராக முயன்றார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடமையை வலியுறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் கடமையின் பாதையில் முன்னேற்றுவது அவசியம்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இந்த நாளில் நாம் நினைத்து பார்க்க வேண்டும். நாட்டின் எதிரிகள் நாட்டுக்குள் புகுந்து மும்பையில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய இன்று நமக்கு மிகவும் சோகமான நாள்.
தீவிரவாதிகளுடன் போரிடும்போது நாட்டின் துணிச்சலான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இன்று அந்த தியாகங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என பாரத பிரதமர் பேசினார்.

admin
