பாலாற்றில் குரோமியம் கழிவுநீரில் சடலம் தூக்கிச் செல்லும் அவலம்! 

ஜி.குலசேகரன்,

ஆம்பூர் அருகே பாலாற்றில் தேங்கியுள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீரில் இறங்கி இறந்தவரின் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம் கடந்த 5 ஆண்டுகளாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைத்து தரக்கோரி ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பாலாற்றை ஒட்டி உள்ள இந்த கிராம மக்கள் பாலாற்றங்கரை பகுதியில் மயானம் அமைத்து இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

   இந்த நிலையில் மழை காலங்களிலும் பாலாற்றில் அவ்வப்போது அங்குள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் குரோமியம் கலந்த கழிவு நீரானது பாலாற்றில் தேக்கிவைக்கப்படுகிறது.

   இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகி கந்தசாமி என்பவர் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய பாலாற்றில் தேங்கியுள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீரில் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  மேலும் பாலாற்றில் ஏற்கனவே மணல் கொள்ளையர்களால் அதிக அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதை அறியாமல் தவறி விழுந்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.